Featured post

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 104

யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 104
தினமொரு சுலோகம்
நாள் 104
தேவேந்திரனின் கவலை

ஸதி தர்மிணீ தர்மா ஹி ஸம்பவந்தீஹ நாஸதி

சரீரம் வித்தியதே யஸ்ய தஸ்ய தத்கில த்ரிப்தந்தி!
सति धर्मिणी धर्मा हि सम्भवन्तिह नासति
शरीरम् विद्ध्यते यस्य तस्य तत्किल त्रिप्तअति!

” இருப்பு (அஸ்தித்வம்)உள்ளவர்களுக்கும் மட்டும். தான்,அனுபவங்கள் உண்டாகும்.சரீரமே இல்லாத அசத்துக்கு எப்படி திருப்தியுண்டாகும்?”

தேவேந்திரன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க நாரதர் கார்கடியின் கதையை விவரமாகச் சொன்னார்:
“இந்த வெறுக்கத்தக்க ஜன்மம் அரக்கி கார்கடி உயிருள்ள ஊசியாக மாறியிருந்தாள்.பாபிகளின் உடலை ஊசி போல் குத் தி துளைத்து அவர்களது நாடி நரம்புகளையும், இரத்தத்தையும் மாசுள்ளதாக்கிக் கொண்டிருந்தாள். அவள் காற்றினால் மனிதர்களின உடல்களில் நுழைந்து தாங்கமுடியாத வேதனையை உள்வாங்கிக்கொண்ட கொண்டிருந்தாள். தூய்மையற்ற உடல்களில்த் தான் அவள் இவ்வாறு நுழைந்து வேதனை உளவாக்கி வந்தாள். கழுகு போன்ற ஈன ஜன்மங்களின உடல்களில்க் கூட நுழைந்து அவற்றின் மாமிசத்தை உண்டு மகிழ்நதாள். மிகுந்த தவ வலிமையின் காரணமாக அவளால் இரையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவிகளின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து அவர்களை தாக்கினாள். அவ்வாறு நுழைவது மூலம் அவர்களது செயல்களிலும் அவள் பங்காளியானாள். காற்றுப் போல் ஸூக்‌ஷமமான சரீரமுடையவளும் கண்ணுக்குத்் தென்படாதவளாகவும் இருக்கிறவளுக்கு என்ன தான் செய்ய இயலாது? ஆனால் அவளது மாசு படிந்து வாசனைகளின் காரணம் அவளுக்கு சிலரிடம் அதிக பிரியமும்,மற்று சிலரை பிடிக்காமலும் போனது.
காலப் போக்கில் அவளின் மனதிலும் மாற்றம் உண்டாயிற்று. அவளுக்கு தனது வாழ்வின் அர்தத்தமின்மை புரிய ஆரம்பித்தது.
அவள் ஒரு கழுகின் மேல் ஏறி இமயமலையின் உச்சியை அடைந்தாள். முதலில் கூறியது போல் கடும். தவம் அனுஷ்டித்தாள்.அந்த தவம் தொடர்கிறது. அல்லையோ , தேவ ராஜன்,அவள் தவத்தை முடக்கவில்லையென்றால் உலகம் அழிந்து விடும் தாங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்.” இவ்வாறு நாரதன் கேட்டுக்கொள்ளும் கொண்டார்.
வஸிஷ்டர் தொடர்நதார்;’இதைக் கேட்ட இந்திரன் கார்கடி தவம் செய்யும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக வாயு தேவனை அனுப்பினான். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக வாயு தேவன் இமய மலைக்கு வந்து சேர்ந்தான்

Advertisements

காசி பஞ்சகம. 7

நிறைவுரை
கடந்த ஐந்து- ஆறு பதிவுகளில் ஆதி சங்கரரின் காசிபஞ்சகம் எனும் பாடல்களை நான் புரிந்த வரை விளக்கியுள்ளேன்.

ஐந்து சுலோகங்களிலும் உள்ளடங்கியிருக்கும் கருத்து ‘ நானே பிரம்மம், எல்லோரும் பிரம்மம்’ என்பதே. இந்த உடலே ‘ நான் ‘ என்பதை மறந்து ‘ நான்’ என்பது உள்ளிருக்கும் பரமன் தான்; அதையறிய ஜாக்ரத், சொப்ன, சுஷுப்தி மூன்று நிலைகளிலும் பக்தி சிரத்தையோடு முயல வேண்டும். காசி விசுவநாதன் நம்முள் வெறும் சாட்சி மாத்திரமாகவே வீற்றிருக்கிறார். நம் செயல்களுக்கான நாமே பொறுப்பு. நம் செயல்கள் உடலையோ, மனதையோ மாசு படுத்தக்கூடாது. நமது கவனமெல்லாம் ‘ நான் யார்’ என்ற ஞானம் பெறுவதிலேயே இருக்க வேண்டும். நமது பக்தியையும் சிரத்தையையும் பரமனுக்கு அர்ப்பணித்து விட்டு அந்த ஞான கங்கையைத் தேட வேண்டும். அது தான் முக்திக்கு ஒரே வழி. அது சாத்தியமாகிவிட்டால் தீர்த்த யாத்திரைகளுக்கும் பூஜை-புனஸ்காரங்களுக்கும் அவசியமில்லை.

நான் யார்’ எனும் அறிவே முக்தி! அந்த அறிவு கிடைக்கும் நிலையில் நாம் அந்த பரமனிடம் லயித்து விடுகிறோம்.

அவ்வறிவினைப் பெறுவதற்கு, ‘சித்த சுத்தி’ எனும் தெளிந்த மனதை, முறை தவறாமல் கரும யோகத்தினாலும், ‘திடமனம்’ எனும் உறுதியான மனதினை, பக்தி யோகத்தினாலும், முதலில் பெற வேண்டும். அத்தகைய மனதினை அடைந்த பிறகே, அழியாமல் அல்லல் படுத்தும் ‘நான்’ எனும் ஆணவத்தை அழிக்கும் ஞான யோகத்தினைப் பெற முடியும். அந்த ஞானமாகிய மேலான அறிவே ‘ஆன்மனை’ அடையும் பாதை.

ஆன்மாவை அறிவது என்பதும் , அதை அடைவது என்பதும் தவறான எண்ணங்கள். நம்மிடம் இல்லாத ஒன்றைத்தான் அடையமுடியும்; நம்மிலிருந்து வேறான ஒன்றைத்தான் அறியமுடியும். அப்படி அடைவதும் அறிவதும் மீண்டும் கை நழுவிப் போகலாம்; மறந்து போகலாம். ஆகவே நான் யார் என்பது அவை இரண்டும் மல்ல; அடைவதுமல்ல; அறிவதுமல்ல.அது ந்ம்மில் புதைந்து கிடக்கும் சத்தியத்தை உணருதல். அந்த சத்தியம் அஞ்ஞானம் அல்லது அவித்யையினால் மூடப்பட்டு, மேகங்கள் மறைத்த சூரியனை போன்றது. அந்த அழுக்குகள் நீங்கிவிட்டால் அந்த  அஞ்ஞானம் அழிந்து விட்டால் சத்தியத்தை உணர முடியும். ஒருமுறை அந்த சாக்‌ஷாத்காரம் ஏற்பட்டு விட்டால் பரமனில் லயித்து விட்டோமென்றால் பூரண முக்தியடைந்து விடுவோம்.

பக்தியும் கர்மமும் அதற்கான ஏணிப்படிகள் தான். அவை மட்டுமே ஆத்ம சாக்‌ஷாத்காரத்திற்கு போதுமானதல்ல. ஞானமார்க்கம்- விடாமுயற்சி  ஒன்று தான் முடிவான வழி என்று சுட்டிக்காட்டுகிறது காசி பஞ்சகம்.காசியாத்திரையினால் பயனில்லை; காசியாத்திரை வேண்டவே வேண்டாம் என்று ஆதி சங்கரர் சொல்லவில்லை.காசியாத்திரை போன்ற புனித கரமங்களின் பொருளை புரிந்து செயல்படுங்கள் என்கிறார்.அதற்கு தூண்டுமுகமாகத்தான் காசிபஞ்சகம் இயற்றியுள்ளார் அதை படித்து உள்வாங்கி நாமும் பயன் பெறுவோமாக!

 

காசிபஞ்சகம் 6

சுலோகம் 5

काशीक्षेत्रं शरीरं त्रिभुवनजननी व्यापिनी ज्ञानगंगा

भक्तिः श्रद्धा गयेयं निजगुरुचरणद्ध्यानयोगः प्रयागः।

विश्वेशोऽयं तुरीयः सकलजनमनः साक्षिभूतोऽन्तरात्मा

देहे सर्वं मदीये यदि वसति पुनः तीर्थमन्यत्किमस्ति ॥५॥

காஶீக்ஷேத்ரம் ஶரீரம் த்ரிபு₄வனஜனனீ வ்யாபினீ ஞானக₃ங்கா₃

ப₄க்தி: ஶ்ரத்₃தா₄ க₃யேயம் நிஜகு₃ருசரணத்₃ த்₄யானயோக₃: ப்ரயாக₃:|

விஶ்வேஶோ(அ)யம் துரீய: ஸகலஜனமன: ஸாக்ஷிபூ₄தோ(அ)ந்தராத்மா

தே₃ஹே ஸர்வம் மதீ₃யே யதி₃ வஸதி புன: தீர்த₂மன்யத்கிமஸ்தி || 5||

பொருள் சுருக்கம்
(எனது) உடலே காசி நகரம். மூவுலகத்திலும் நிறைந்து விளங்கும் அன்னையாகிய கங்கை (என்னுள் இலங்கும்) உயர்ந்த அறிவு. பக்தியும், மாறாத நம்பிக்கையால் கொண்டுள்ள குறிக்கோளுமே கயை எனும் புனித இடம். நல்வழிகாட்டும் குருவின் திருவடிகளில் செய்யும் சேவையே பிரயாகை. விழிப்பு, கனவு, உறக்கம் எனும் மூன்று அனுபவ உலகங்களையும் தாண்டிய துரீயமெனும் நிலையிலிருந்து, எல்லா உயிர்களுக்குள்ளும் சாட்சியாக இருந்துவரும் (என்னுள்ளிருக்கும்) ஆன்மாவே, காசி விஸ்வநாதப் பெருமான். இப்படி என் உடலிலேயே எல்லாமும் இருப்பதால், புண்ணிய யாத்திரைகள் என்று வேறு எந்த இடத்திற்கு நான் போகவேண்டி உள்ளது? (தேவையில்லை.)

விளக்கவுரை
இப்பாடலிலே ஆதி சங்கரர்,  ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைந்து விட்ட ஒருவனுக்கு காசி, கயா, பிரயாகை போன்ற புனித த்தலங்களை தரிசிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று உறுதியாக கூறுகிறார்.ஏன் இப்படி கூறுகிறார்? இந்த மூன்று இடங்களும் இந்து மத நம்பிக்கையின் அடிப்படைத் தூண்களல்லவா? ‘ஆதிசங்கரரே இப்படிக் கூறலாமா’ என்று நம்முள் கேள்வி எழும்பலாம்.

காவியங்கள் புனையும் பொழுது ‘ வஞ்சப் புகழ்ச்சி’ அல்லது நிந்தா ஸ்துதி என்றொரு முறை உண்டு. மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒருவரை இகழ்ந்து சொல்வது போல் இருந்தாலும், உண்மையில் அவரது பெருமைகளை வலியுறுத்திக் காட்டவே அப்படி சொல்லப்படுகிறது. 

அந்த முறையில் இயற்றப்பட்டது தான் ஆதி சங்கரரின் இந்த பாடலும்.

நமது சரீரமே  காசி மாநகரமாகவும்,மூவுலகங்களிலும் பெருக்கெடுத்தும் கங்கை எனும் அறிவுக் கடல் என்னுள் பொங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது, பக்தியும் அசையாத நம்பிக்கையும் தளும்பி வழியும் என் மனமே கயா எனும் புண்ணிய தீர்த்தமாக இருக்கும் பொழுது, கங்கை, யமுனை, சரஸ்வதீ மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாகிய பிரயாகை நாம் செய்யும் குரு சேவையே எனும் பொழுது, அவைகளுக்கெல்லாம் சாட்சியாக அந்த பரமசிவனே என்னுள் ஆத்மாவாக வீற்றிருக்கும் பொழுது, நாம் ஏன் மற்ற புண்ணிய தீர்த்தங்களை தேடி போக வேண்டும் என்று சங்கரர் கேட்கிற மாதிரி அமைந்துள்ளது இந்த சுலோகம்.

உடலே காசி. காசியில் கரைபுரண்டோடும் கங்கை மூவுலகங்களிலும் – சுவர்க்கத்திலும் பாதளலோகத்திலும் பூமியிலும்-ஓடிக்கொண்டிருக்கிறாள் .அவளை சுவர்க்க லோகத்தில் மந்தாகினி என்றும் அழைக்கிறார்கள். அதுபோல் ஞானகங்கை நம் ஜாக்ரத், சொப்ன, சுஷுப்தி மூன்று அவஸ்தைகளிலும் நம்மில் பிரவகித்துக் கொண்டிருக்கிறாள்.

பக்தி சிரத்தையுடன் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யுமிடம் கயா. அதே போல் ஞானத்தை பக்தியுடனும் சிரத்தையுடனும் பேணுவது கயையில்த் தான்.அந்த கயை  நம்முள்ளே தான் இருக்கிறது.

பிரயாகை அல்லது திரிவேணி சங்கமம் கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடம்.கங்கையே விழிபுணர் அறிவு. யமுனை அதனைச் சார்ந்த கனவுலகறிவு. கண்ணுக்குத் தெரியாத ஸரஸ்வதி ஆழ்துயிலறிவு. அதாவது, நம்முடைய மூன்று அனுபவ நிலைகளும் (விழிப்பு, கனவு,ஆழ்துயில்) மூன்றும் ஒன்றாய் இருக்கும் நிலையைத் தான், திரிவேணி சங்கமம் குறிக்கின்றது. அது தான் துரீயாதீத நிலை.அத்தகைய நிலை வருவது மிகவும் அரிது; தவமும், சமாதி எனும் பெரு நிலையும் எய்தினால்தான், நம்முடைய இந்த மூன்று உலகங்களும் ஒன்றாகும் நிலை கிடைக்கும். எனவே, அவ்விடம் பிரபாகர் ஒரு அரிய வாய்ப்பு என்று கொள்ளலாம். அப்படிப்பட்ட அனுபவம் வெளியே எங்கும் போவதால் கிடைப்பதில்லை. அது மன உறுதியாலும் ‘ நான்யார்’ என்று விசாரித்தறிவதிலும் தான் கிடைக்கிறது. ஆகவே பிரயாகையும் நம்முள்ளே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் சாட்சியாக வீற்றிருக்கும் காசி விசுவநாதன் ஆத்மாவாக நம்முள் வீற்றிருக்கிறார். அவன் சரணங்களில் பக்தி சிரத்தையுடன் வணங்கினால் – ஆத்ம சாக் ஷாத்காரம்- பெற்றால் நமக்கு முக்தி கிடைத்து விடும்பொழுது வேறு எங்கு செல்ல வேண்டும்?

அழியக்கூடியது என்றாலும், உடல் என்பது ஆன்மா வசிக்கும் வீடானதால், அவ்வுடலைத் தூயதாக வைத்துக்கொள்வது அவசியம். காசியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆதி சங்கரர் அந்த நாட்களிலேயே! சுருக்கமாக சொல்லப்போனால் , அழியக்கூடியதாக இருந்தாலும் விசுவநாதன் வசிக்கும் இடம் என்பதால் நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த உடலில் த்தான் விமல கங்கை ஒழுகுவதால் ஞானம் தங்கும் நம் மனதை தூய்மையுடன் பேணிகாப்போம்.கயையில் போய் எந்த அளவு பக்தியுடனும் சிரத்தையுடனும் சிரார்த்தம் கொடுப்போமோ அதே சிரத்தையுடனும் பக்தியுடனும் நம்முள் வசிக்கும் விசுவேசவரனை வணங்குவோம் இது விழிப்பு, உறக்கம், ஆழ்துயில் என்ற மூன்று நிலையிலும் தொடரட்டுமே.அப்படி செய்தால்த் தான் நாம் சத்தியத்தை கண்டறியமுடியும் . நம்முள்ளே பரமனே வசிக்கிறான். எல்லார் உள்ளேயும் அவனே வசிக்கிறான். ஆகவே விருப்பு வெறுப்புக்களுக்கு இடமே கிடையாது என்பதை உனணருவோம்.

ஜீவன் முக்தரது அனுபவ நிலையிலே காசி நகரத்தின் பெருமைகளான, அங்கு விளங்கும் ஐந்து மகத்தான பொருட்களும் தன்னுள்ளேயே இருப்பதனால், தான் அந்த உயரிய ஆத்ம அனுபவம் அடைந்து இனி சாதிப்பதற்கு எதுவுமில்லை என்று ஜீவன் முக்தராகிய காரணத்தினால், (நன்றிக் கடனாக இவ்வாறெல்லாம் பாடி வணங்குவதைவிட) வேறு எந்தப் புண்ணிய தீர்த்தங்களை அடைய வேண்டும் என்று கேட்கிறார். அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்ற அத்வைத தத்துவத்தைத்தான் இப்பாடலில் அழகுறக் காட்டி உள்ளார் பகவான் சங்கரர்.

காசிபஞ்சகம் 5

சுலோகம். 4

काश्यां हि काशते काशीकाशी सर्वप्रकाशिका।

सा काशी विदिता येन

तेन प्राप्ता हि काशिका ॥४॥

காஶ்யாம் ஹி காஶதே காஶீ

காஶீ ஸர்வப்ரகாஶிகா|

ஸா காஶீ விதி₃தா யேன

தேன ப்ராப்தா ஹி காஶிகா || 4||

பொருள்சுருக்கம்

இவ்வுடலே உண்மையில் காசி. (இதில்) ஒளிர்கின்ற ஆன்மாவே காசி. அனைத்தையும் ஒளிமயமாக்கும் காசியாகிய பரமாத்மாவும் அதுவே . இந்த உண்மையை என எவரால் உணரப்படுகிறதோ, அவருக்கே, முக்தி அல்லது விடுதலை அந்த முக்தியே காசி. 

விளக்கவுரை

   காசி என்றால் பிரகாசிக்கின்ற ஒன்று என்று பொருள். காசி நகரத்தை சுவர்ணபுரி என்றும் கூறுவார்கள்.ஒரு முறை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கொல்கத்தாவிலிருந்து காசிக்கு ஓடத்தில் சென்றார். காசியை நெருங்கிய பொழுது காசி நகரமே பிரகாசமயமாகக் காணப்பட்டதைப் பார்த்து ‘இது என்ன சுவர்ணபுரி’ என்று வியந்தாராம்.காசிக்கு அப்படி ஒரு ஒளி. 
.
உடலே காசி. உடல் காசி நகரம்  போல் ஒளிர்கிறது. அதனாலேயே அதனால் கர்மங்களை செயல்படுத்த முடிகிறது. கண்களுக்குத் தன் ஒளியால்  தனக்கு வெளியிலுள்ள பொருட்களை பார்க்கமுடிகிறது. காதுகளுக்குள்ள ஒளியால் ஒலிகளைப் கேட்டு புரிந்து கொள்ள முடிகிறது.உடலை பொதிந்துள்ள தோலுக்குமுண்டு ஒளி. ஆகவே தான் நாம் தொடுகின்ற பொருட்களை இன்னதென்று உணர்கிறோம். நாவிற்குமுண்டு ஒளி. அந்த ஒளியால் ருசிகளை அறிகிறோம். நாசியின் ஒளியால் மணத்தை அறிகிறோம். ஆக நம் தேகமே ஒளிமயமாக உள்ளது. ஆக அதுவே காசி.

இந்த ஒளிமயமான உடலில இருக்கும் ஆத்மாவே காசி. அந்த ஆத்மா இல்லாமலிருந்தால் நம் உடல் ஒன்றுக்குமாகாது. ஆத்மாவே  உடலுக்கும் அதன் அவயவங்களுக்கும் ஒளி நல்குகின்றது.

அதாவது ஒவ்வொரு உடலும்  காசியே ஆகும். இறைவனே எங்குமிருப்பதால், எல்லா உடல்களும் பொருட்களும், அவை எந்நிலையில் இருந்தாலும், அவை இறைவனே. அப்பரந்த நோக்கே இக்கூற்றின் விளக்கம்.
அந்த உடலில் இருந்து உயிர்த்தும், ஒளிர்ந்தும் விளங்கும் ஆன்மாவே காசி. அந்த ஆன்மாவே பரமாத்மாவாக இருந்து, அனைத்து உடலிலும் ஒளியைத் தருகின்றது. அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்ற இந்து மத தத்துவங்களை இந்த சுலோகத்தில் பகவான் சங்கரர் மீண்டும் வலியுறுத்துகிறார்

இந்த உண்மையைப் புரிந்து உணர்ந்து கொள்பவர் எவரோ, அவரின் ஆன்ம ஞானமாகிய ஒளியே காசி. அந்த ஞான ஒளியைக் கண்டவர் ஆத்மசாக்‌ஷாத்காரம் அடைந்தவர். அவர்கள் காசியாகிவிடுகிறார்கள்.

ஆத்ம சாக்‌ஷாத்காரம் எனும் ஞானஒளியாகிவிட்டவர்கள் பரமாத்வுடன் லயித்து விடுகிறார்கள். அவர்களுக்கு பிறப்பு- இறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது. அந்த விடுதலையே காசி.அதனை உணர்பவர் எவரோ, அவரே முக்தி என்னும் காசியினை அடைவார்.அதற்கு ஆயிரமாயிரம் மைல்கள் பயணம் செய்யவேண்டியதில்லை.

இவ்வாறு, உடலாகிய கருவி, பகுத்தறியும் விசையாகிய அறிவு, ஆன்ம ஒளியான சாட்சி, ஆன்மாவே பரம்பொருள் எனும் பேருண்மை, அவ்வுண்மையை உணர்வதால் அடையும் முக்தியாகிய பலன் என்று, கருவி, அறிவு, சாட்சி, கைக்கொள்ளும் ஞானம், முடிவான பயன் என எல்லாமே காசி என்று பகவான் சங்கரர் அடிக்கோடிட்டு காட்டுகிறார் இந்த சுலோகத்தில். .

 இப்படி நம்முள்ளேயே காசி இருக்கும் பொழுது, பரமாத்மன் வசிக்கும் பொழுது, நம்மால் அந்த பரமனை காசியை ஏன் அவ்வளவு எளிதாக பார்க்கமுடியவில்லை? அதற்கு காரணம் ஆசாரியர் ஏற்கனவே கூறியது போல், நமது மனோவிருத்திகள் விளைவிக்கும் இந்திரஜாலம் தான்.இதை ஞானிகள் அன்னியாபிநிவேசம் என்றும் கூறுவார்கள். நம்முள் இருக்கும் பரம சத்தியத்தை மறந்து விட்டு நமக்கு அன்னியரான, தேவையற்ற பொருட்களின் மீது அபிநிவேசம்- ஈடுபாடு கொள்வது தான் நிஜபோதரூப ஸ்வரூபமாகிய காசியை காண இயலாமல் போவதற்கு காரணம்.ஆகவே அந்த ஆசைகளை அழித்து விட்டால் நாம் எளிதாக காசியை அடைந்து விடலாம். அதற்கு ஹரிச்சந்திர கட்டத்திறகும் போகவேண்டாம் மணிகர்ணிகா கட்டத்திற்கும் போக வேண்டாம்.

 

யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 393

தினமொரு சுலோகம் 393

நாள் 393

இராமன் பெற்றான் ஆத்மஞானம்

க்³ராஹ்யக்³ரஹாக ஸம்ப³ந்தே⁴ ஸாமான்யே ஸர்வதே³ஹினாம்ʼ

யோகி³ன: ஸாவதா⁴னத்வம்ʼ யத்தத³ர்ச்சனமாத்மன: (6/43/8)

ग्राह्यग्रहाक संबन्धे सामान्ये सर्वदेहिनां

योगिन: सावधानत्वं यत्तदर्च्चनमात्मन: (6/43/8)

grāhyagrahāka saṃbandhe sāmānye sarvadehināṃ

yogina: sāvadhānatvaṃ yattadarccanamātmana: (6/43/8)

வஸிஷ்டர். சொன்னார்:” ‘ அஸத்தான’ ஜீவன், இல்லாத உலகத்தை , அஞ்ஞானத்தின் பொருளற்ற தாக்கத்தால் அறிகிறது. இதில் ‘ஸத்’ எது, ‘அஸத்’ எது என்று எப்படி அறிவது? கற்பனையில் உருவான ஒரு பொருளை யாரோ அழகாக விவரிப்பது போல்த்தான் அது. பிறகு அதை கேட்கின்றவர் தங்கள் மனதில்  எல்லாம் புரிந்தது போல் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

திரவங்களிலுள்ள திரவத்தன்மை, காற்றின் அசைவு, ஆகாயத்தின் வெறுமை என்பவை போல் ஆத்மா எங்கும் நிறைந்து காணப்படுகிறது.அன்று பகவான் பரமசிவன் உபதேசித்த பிறகு நான் எல்லையில்லாத அந்த பரமாத்மாவை எப்பொழுதும் உபாசித்து வருகிறேன்.அப்படிப்பட்ட ஆராதனையின் காரணமாக, நான் எந்த கர்மங்களில் ஈடுபட்டாலும் அவைகளின் பலன்கள் என்னை பாதிப்பதில்லை.அவைகளினால் எனக்கு துன்பம் ஏதும் அனுபவிக்க வேண்டி வருவதில்லை.

பலதாக தெரிந்தாலும் ஒன்றேயான அந்த பரமாத்மாவை கையிலகப்படும் எதையும் மலர்களாகக் கருதி அவைகளை அர்ச்சிக்கிறேன்.இயற்கையாக என்னில் உதித்து வரும் கர்மங்களை நான் செய்கிறேன். 

” என்னைப் சுற்றியுள்ளவர்களோடு தொடர்பு கொள்வது,பொருட்களை சொந்தமாக்கிக் கொள்வது,மற்றவர்களுக்கு பொருட்களை விட்டுக் கொடுப்பது,என்பவை உடலிலிருக்கின்ற ஜீவனின் இயற்கையான செய்கைகள். ஆனால் யோகிகள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களுடைய விழிப்புணர்வு தான் ஆத்ம பூஜை”.

இம்மாதிரியான மனநிலையுடன் எந்த விதமான ஆசைகளுக்கும் ஆட்படாமல் நான் இந்த பிரபஞ்சம் எனும் அடர்ந்த காட்டில் உலாவருகிறேன்.நீயும் அவ்வாறே செய்வாயேயானால்  துயரமனுபவிக்க வேண்டி வராது.வேண்டியவர்களின் பிரிவு,செல்வ நஷ்டம், போன்ற கஷ்டங்கள் வரும்பொழுது சத்தியத்தை நான் சொன்னது போல் தேடு! உன்னை இன்பமோ துன்பமோ பாதிக்காது.
உனக்கு காரியங்களின் இருப்பு புரிந்திருக்கும் . பிரபஞ்ச மாயக்காட்சிகளில் ஈர்க்கப்பட்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபடாதவர்களின் நிலைமை என்ன என்று உனக்கு இப்பொழுது தெரியுமல்லவா! அப்படிப்பட்டவர் உனக்கு தகுந்தவர்களல்ல.நீயும் அவர்களுக்கு பொருத்தமானவனல்ல..
இது தான் உலகின் ‘ அஸத்’ குணம். அதாவது உண்மையில் இல்லாத உலகின் இல்லாத குணங்கள்.ஆகவே இராமா, நீ துயரப்பட வேண்டியதில்லை.இராமா, நீ தூய போதமே! பலவிதமான மாயா சிருஷ்டியின் பொய்பிம்பங்கள் தூய போதத்தை பாதிக்காது.இது புரிந்து விட்டால் விருப்பு- வெறுப்புக்கள் உன்னில் எப்படி முளை விட முடியும்?. இராமா, இந்த அறிவு உன்னுள் நிறைந்து, துரீயமெனும் நான்காம், இந்திரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நிலையில் உறுதியாக நிலை கொள்ளவும்.”. 

இராமன் சொன்னான்:”.  குருவே! நான் துவைதம் என்ற அழுக்கிலிருந்து விடுபட்டு விட்டேன்.இவையெல்லாமே பிரம்மம் தான் என்பதை புரிந்து கொண்டு விட்டேன்.என் பிரக்ஞை மாசற்றதாய் விட்டது.என்னுள்ளிலிருந்த சந்தேகங்கள்,எண்ணங்கள்,கேள்விகள் எல்லாமே அழிந்து விட்டன.எனக்கு சொர்க்கத்தில் ஆசையில்லை.நரகத்தை நினைத்து பயமுமில்லை.நான் ஆத்மாவில் ஆனந்தம் அடைகிறேன்.தங்கள் ஆசீர்வாதத்தால் இந்த சம்சாரக் கடலை கடக்க என்னால் இயலும்.ஆத்மஞானத்தின் புரிதல் பூரண சத்ய சாக்‌ஷாத்காரமாக என்னில் நிறைந்துள்ளது.” 

காசிபஞ்சகம் 4

சுலோகம் 3

पञ्चस्वधिराजमाना

बुद्धिर्भवानी प्रतिदेहगेहे ।

साक्षी शिवस्सर्वगणोऽन्तरात्मा

सा काशिकाऽहं निजबोधरूपा ॥३॥

கோஶேஷு பஞ்சஸ்வதி₄ ராஜமானா

பு₃த்₃தி₄ர் ப₄வானீ ப்ரதிதே₃ஹ கே₃ஹே |

ஸாக்ஷி ஶிவஸ்ஸர்வ க₃ணோ(அ)ந்தராத்மா

ஸா காஶிகா(அ)ஹம் நிஜ போ₃த₄ரூபா || 3||

பொருள் சுருக்கம்

பஞ்ச கோசங்களில் பிரதானமான விஞ்ஞானமய கோசத்தில் கொலுவீற்றிருக்கிறாள் அன்னை பவானி. இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். விஞ்ஞானமய கோசம் தான் அன்னை பவானியின் வீடு.அந்த உயிரினங்களின் சாட்சி மாத்திரமான ஆத்மா தான் சிவன் அல்லது பரமாத்மா. காசி மாநகரம் அப்படிப்பட்ட ஆத்மாவின் சுய ரூபமே!

விளக்கவுரை

‘நான்’ யார் என்ற கேள்விக்கு பதிலிறுக்கும் வகையில் சங்கரர் இந்த சுலோகத்தை அமைத்துள்ளார்.நம் – எல்லா உயிரினங்களின் உடல் ஐந்து வித உறைகளால் உருவாகியுள்ளது. அவை, அன்னமய கோசம், பிராணமய கோசம்,மனோமய கோசம்,விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம். உணவு உண்பதால் மட்டுமே உருவாகி , வளர்நது, தளர்ந்து, வீழ்கின்ற உடல் அன்னமய கோசம் எனப்படுகிறது. வெறும் உடல் மட்டும் இருந்து விட்டால் ஜீவன் உயிர் வாழ முடியாது. அதற்கு பிராண வாயு தேவை.அது பிராணமய கோசம். மூச்சுக்காற்று நின்று விட்டால் உடல் பிணமாகிவிடுகிறது. அதால் ஒன்றும் செய்ய இயலாது.உடலும் இருந்து , உயிரும் இருந்து, என்ன செய்ய வேண்டும் என்று தீருமானிப்பது மனம். அது மனோ மய கோசம்.அந்த மனம் செயல்பாட்டில் இல்லையென்றால் உயிருள்ள உடல் வெறும் நடைப்பிணம்தான்.ஆனால் மனம் ஒரு குரங்கு. அதற்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரியாது. அதை வழி நடத்திச் செல்லும் சாரதி தான் விஞ்ஞான கோசம்.இந்த நாலும் செயலற்றதாக இருக்கும்,ஆனால் உயிருடன் இருக்கும் ஜீவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது ஆனந்தத்தை அனுபவிக்கின்றது. அதற்கு ஏதுவானது ஆனந்தமய கோசம்.

இவைகளில் முக்கியமானது  ஆனந்தமய கோசம். அது நிலையேயில்லை. அப்பொழுது அந்த நிலையில் நாம் ஒன்றுமே அறிவதில்லை.பரம சாந்தியை- எந்த ஒரு அசைவுமில்லாமல் ஜீவன் நிலைகொள்கின்றது.

ஆனால் விஞ்ஞான கோசம் என்பது மனதை வழி நடத்திச் செல்கின்ற பவானி.அந்த சர்வ சக்தி வாய்ந்த பவானியின் உதவியின்றி நாம் நம்மில் எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பரமாத்மனை காணமுடியாது. அந்த விஞ்ஞான கோசம் இந்த அழியும் உடல் தான் ‘நான்’ என்று அறிவுறுத்திக்கொண்டிருக்கும் வரை ஞானம் பிறக்காது. விஞ்ஞானமய கோசத்தின் வழிகாட்டுதலின்படி மனோமய கோசமும் பிராணமய கோசமும் அன்னமய கோசமும் சேர்ந்து நடத்தும் விளையாட்டுக்கள் தான் பிரபஞ்ச வாழ்க்கை. என்று விஞ்ஞானமய கோசம் சரியான வழியை காண்பிக்கின்றதோ, அந்த நொடியில் இந்த உடல் தான் ‘ நான்’ என்ற எண்ணம் அழிந்து விடும். உண்மையான ஞானம் பிறக்கும்.அப்பொழுது அந்த ஆனந்தமய கோசத்தில் சாட்சியாக வீற்றிருக்கும் சிவனை- பரமனை- காண்கிறோம். அது தான் ஈசுவர சாக்ஷாத்காரம்.ஆக, அந்த பரமன் வெறும் சாட்சி தானென்றாலும் அவனே பரமானந்தத்தைத் தருகிறான். அந்த உண்மையான நான் தான்- நிஜபோதரூப சொரூபம் தான்- காசிமாநகரம. அதை தரிசிப்பது தான் நமது வாழ்வின் இலட்சியம்.இதையே தான் பிற்காலத்தில் தாயுமானவர் கீழ்க்கண்ட பாடலில் கூறியுள்ளார்:

  தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன              

                     செயற்கொண் டிருப்பனமுதல்

  தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பௌதிகஞ்

         சென்மித்த ஆங்கிறக்கும்

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்

        மேற்கொண்ட சேடம் அதுவே

   வெறுவெளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த

         வேதவே தாந்தஞானம்

பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள் அருட்

        பெற்றோர்கள் பெற்றபெருமை

  பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து

        பேசாமை யாகுமெனவே

பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே

        பரிபாக காலமலவோ

  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற

        பரிபூர ணானந்தமே.

முதல் நாலு கோசங்களில் எதுவும்  நிஜமான ‘ நான்’ ஆக இருக்க முடியாது.அன்னமய கோசம் என்ற உணவு பிண்டம் , இந்த பௌதிக சரீரம்’நான்’ ஆக இருக்கமுடியாது. என்னை நானே எப்படி பார்க்கமுடியும்? கண்ணை கண்ணே பார்க்க முடியுமா? ஆனால் நாம் ந்து உடலை காண்கிறோம். அடுத்தவர்களைப் பார்த்து’ என்ன உடம்பு சரியில்லையா ? என்னவோ மாதிரி இருக்கிறாய்?’ கேட்கிறோம் . இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் உடல் வேறு, ‘நீ’ அல்லது ‘ நான்’ வேறு என்பது தான்.

மனோமய கோசத்தின் செயல்களால் உடல் உறங்கும்பொழுதும் நாம் கனவு காண்கிறோம். உறக்கத்திலிருந்து விழித்து எழுந்திருக்கும் பொழுது , உறக்கத்தில் கண்ட கனவுகளை நினைவு கூறுகிறோம்.ஆகவே மனோமய கோசத்திலிருந்து வேறாக ‘நான்’ என்று ஒன்று இருப்பது தெரிகிறது. விழிப்பு நிலையில் செய்கின்ற கர்மங்களை ‘ நான்’ தான் செய்கிறேன் என்ற கர்த்துருத்துவ பாவம் தான் விஞ்ஞானமய கோசம்.

ஆனால் எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருப்பது அந்த பரமன் ஒருவன் தான். பரமாத்மா ஒருவன்தான். அவன் ஒன்றும் செய்வதுமில்லை.எந்த வித மாற்றங்களுக்கும் ஆட்படுவதுமில்லை. காசி மாநகரமும் அது போல் எல்லாவற்றிற்கும் சாட்சியாக நிலை கொள்கிறது. பரமனே காசி, காசியே பரமன் என்கிறார் பகவான் சங்கரர்.


.

காசிபஞ்சகம் 3

சுலோகம் 2

यस्यामिदं कल्पितमिन्द्रजालंचराचरं भाति मनोविलासम्।

सच्चित्सुखैका परमात्मरूपा

सा काशिकाऽहं निजबोधरूपा ॥२॥

யஸ்யாமித₃ம் கல்பிதமிந்த்₃ரஜாலம்

சராசரம் பா₄தி மனோவிலாஸம் |

ஸச்சித்ஸுகை₂கா பரமாத்மரூபா

ஸா காஶிகா(அ)ஹம் நிஜபோதரூப

பொருள் சுருக்கம்

மனதின் இந்திரஜாலம் தான் கற்பனையில் தோன்றும் எல்லா உயிரினங்களும், அவை வாழுகின்ற இந்த பிரபஞ்சமும்.உண்மையில் இருப்பது பரமாத்மா ரூபமான ஆத்மா ஒன்று தான்.அந்த நிஜ போத ஸ்வரூபம் தான் காசி மாநகரம்.

விளக்கவுரை.

இந்த பிரபஞ்சமும் அதில் தோன்றி மறையும் உயிரினங்களும் வெறும் கற்பனையே. அந்த பிரமைக் காட்சிகள் தோன்றுவதோ மனதின் இந்திரஜாலத்தாலத் தான். அவையெல்லாம் தோன்றுவது நம் போதஸ்வரூபத்தில்த் தான்.

சினிமாப் படத்தை நாம் திரையில் காண்கின்றோம். அதில் மனிதர்களும் மற்ற அசையும் அசையாப் பொருட்களும் வருகின்றன; போகின்றன; அழுகின்றனர்; சிரிக்கின்றனர். புரொஜக்டரை ஓட்டுபவன் அதை நிறுத்தும் பொழுது திரை வெறுமையாக காட்சியளிக்கின்றது. அங்கு எதுவும் இல்லை. அது போல் மனம் அமைதியடைந்து தனது செயல்களை நிறுத்திக் கொள்ளும் பொழுது அங்கு மாசற்ற வெண் திரை மட்டும் தான் காணப்படுகிறது. அது தான் நிர்மலமான ஆத்மா. அது வரை நாம் கண்ட காட்சிகளெல்லாம் ஆத்மாவிலேயே உருவான காட்சிகள். மனமெனும் அவித்யையால் உளவாக்கப்பட்ட பிரமைகள் தான்.அவை எதுவும் உண்மையில்லை. நித்தியமுமில்லை. அவை ஓடி மறையக்கூடிய சினிமாக் காட்சிகள் போன்றது தான்.

நாம் காணும் கனவுக்காட்சிகளும் இது போல்த் தான். நமக்குள்ளேயேதான் மழை பெய்கிறது; வெயில் அடிக்கிறது; நாம் அழுகிறோம்; சிரிக்கிறோம்; நடக்கிறோம்; ஓடுகிறோம்; நிற்கிறோம்; உட்காருகிறோம்; சண்டை போடுகிறோம்; நட்பு பாராட்டுகிறோம். எல்லாமே நமது உறக்கம் கலைந்து விழித்தெழுந்திருக்கும் வரைத் தான். விழித்து எழுந்து விட்டால் நாம் நாமாக இருக்கிறோம். அது போல் அவித்யை எனும் இருள் நம்மை பிடித்துக் கொண்டிருக்கும் வரைத்தான் இந்த பிரபஞ்சமும் அதன் அனுபவங்களும் இருக்கும். அவித்யை எனும் இருள் அகன்று விட்டால் மீதமிருப்பது மாசற்ற ஆத்மா மட்டும் தான்.

ஆனால் இந்த பிரபஞ்ச வாழ்வில் கனவு நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு -ஜாக்ரத் நிலைக்கு-வரும்பொழுது ‘ நான்’ எனும் அஹமும் விழித்து எழுந்திருக்கிறது; ‘ நான்’ இந்த சரீரம் தான் என்று நம்ப ஆரம்பித்து அதன் விளைவுகளை அனுபவிக்கின்றது. இதெல்லாம் மனதின் சேஷ்டைகள் தான்; மனோ விலாசங்கள் தான்; மனதின் லீலைகள் தான்.மனம் ஓயும்பொழுது மறைந்து போகின்ற சினிமா ப் படம் தான்.அவை உண்மையல்ல.

பிறகு உண்மை தான் என்ன? அது தான் சத் சித். சத்சிதானந்தனை தரும் ஆனந்தம் தான் நித்தியம், நிரந்தரம், அழிவில்லாதது.அந்த சத்திய மான சித் தான் பரமாத்மா ரூபமான ஆத்மா. அது தான் நமது உண்மையான ரூபம். அது தான் காசி மாநகரம். இந்த காசிமாநகரத்தை தரிசிப்பது தான் நமது இலட்சியமாகிய இருக்க வேண்டும்.

உண்மையைப் போல் தோன்றும் இந்த பிரபஞ்ச காட்சிகளெல்லாம்  அந்த பரமாத்மாவிலிருந்து உளவானது தான். எப்படி உளவாயிற்று என்று வார்த்தைகளால் விளக்க முடியாது. மனதின் மாயா சக்தியினால் உண்மை போல் தெரியும் கற்பனைகளும் அதில் தெரியும் அசையும், அசையா உடல்களாக விளங்கும் வெளி உலகங்களும், (அவற்றின் அனுபவங்களாக) மனதுள் விரியும் உள் உலகங்களும்  அந்த பரமாத்விலிருந்து உருவானவை தான். அந்த பரமாத்மா மட்டும் தான் உண்மை. அந்த பராத்மாவே ‘நான்’.அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே. ஒன்றன்றி வேறில்லை. 

அதுவே  சத்தியம். அதாவது, மாறாது எப்போதும் சுயமாக ஒளிர்நது கொண்டு விளங்குவது. அது சித் அல்லது முழுமையான நிச்சயித்த அறிவு. அது ஸுகம் அல்லது பேரின்பநிலை. அதுவே சத்சிதானந்தன். (தன்னொளி பரப்பி யாவற்றையும் உயிர்க்கும் ஆன்மாவாகத் தன்னை உணர்ந்து கொண்டதன் பயனால்) ஆத்மாவாகிய நானே (ஒளி மையமான) காசி நகரம்.


இந்த சுலோகத்தில் அத்வைத தத்துவத்தின் சாரமான இரண்டு உண்மைகளை பகவான் ஆதிசங்கரர் வலியுறுத்துகின்றார்.
முதலாவது பிரம்மம் ஒன்றே சத்தியம், ஜகம் மித்தியை என்பது. அதாவது, பரம்பொருளான பிரம்மம் ஒன்றே எப்போதும் நிலைத்து விளங்குவது. அதனால் அது ‘சத்தியம்’. மற்றவை எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்ற உலகங்கள். அம்மாற்றம் ‘மித்தியை’ , அழியக்கூடியவை.. 
இந்த உலகங்கள் இருவகை. வெளியில் தெரிகின்ற உலகங்கள் ஒரு வகை, நம் ஒவ்வொருவருடைய மனதிலும் அனுபவித்து  உணர்கின்ற உலகங்கள் ஒருவகை. வெளி உலகங்களில், அசையும் உடல்களான உயிரினங்களும், அசையாத உடல்களான பொருட்களும் விளங்குகின்றன. இவை எல்லாம் பிறந்தும், வளர்ந்தும், தளர்ந்தும், சிதைந்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த வெளி உலகங்களைப் பார்த்து, அதனால் பலவித அனுபவ நிலைகளைத் தன்னுள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, நாமெல்லாம் மனதுக்குள் வேறு வகையான உலகங்களையும் படைத்துக் கொள்கிறோம். அதனாலேதான் ஒரே வெளிஉலகத்தை, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பார்க்கிறோம்.
மாற்றம் என்பது இருக்க வேண்டும் என்றால், அப்படி மாறுகின்ற ஒன்று இருக்க வேண்டும்; அது மாற்றமில்லாத ஒன்றாக  இருக்க வேண்டும். இந்த வெளி, உள் உலகங்கள் எல்லாம், சத்தியமான பிரம்மத்தைச் அடிப்படையாகக் கொண்டே  மாறுகின்றன. அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் எல்லாம், பிரம்மத்தினுடைய விளக்க முடியாத மாயா சக்தியினால், கற்பனையாகப் படைக்கப்பட்டவை என்பதே ‘பிரம்மம் சத்தியம், . !ஜகம் மித்தியம்’ எனும் அத்வைத சித்தாந்தம்..
இரண்டாவது அத்வைத உண்மை, ‘தத்வமஸி’ அல்லது ‘அஹம் பிரம்மாஸ்மி’ அதாவது ‘அது நீயே’ அல்லது ‘யானே பிரம்மம்’ எனும் வேதாந்தக் கோட்பாடு. அந்தப் பிரம்மமும், எல்லா உயிர்களுள்ளும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவும் ஒன்றே. பரம ரூபம், ஆத்ம ரூபம் இரண்டும் ஒன்றே என்பதே, பரமாத்மரூபம் எனும் சொல்லினால் காட்டப்பட்டது. அந்த வடிவமே ‘ஸத் ரூபம்’, ‘சித் ரூபம்’, ‘ஸுக ரூபம்’ எனக்காட்டி, பரமாத்மா நிலையானதும், முழுமையான அறிவானதும், மாறாத பேரின்பமானதுமான சச்சிதானந்தம் என்று பகவான் ஆதிசங்கரர் இப்பாடலிலே வலியுறுத்துகின்றார்.
இவ்வுண்மையை முற்றும் உணர்ந்து ஜீவன் முக்தர் எனும் நிலையை அடைவது நமது இலட்சியமாகிய இருக்க வேண்டும். சச்சிதானந்த ரூபமான பரமாத்மாவைத் சாக்‌ஷாத்கரிப்பது, ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைவது, சத்திய சாக்‌ஷாத்காரம் அடைவது நமது வாழ்வின் இலட்சியம்.அப்படி அடைவதன்  மூலம் நிரந்தரமான ஆனந்தத்தை பெறமுடியும். ஆகவே நிஜ ஸ்வரூபமாகிய சத்சிதானந்தனை பரமனை, பரமாத்மாவை , காசிநகரத்தை தரிசிப்பது, உணருவது தான் நமது வாழ்வின் இலட்சியமாகிய இருக்க வேண்டும். 

 காசிபஞ்சகம் 2

சுலோகம் 1

मनोनिवृत्तिः परमोपशान्तिःसा तीर्थवर्या मणिकर्णिका च

ज्ञानप्रवाहा विमलादिगंगा

सा काशिकाऽहं निजबोधरूपा ॥१॥

மனோநிவ்ருத்தி: பரமோப ஶாந்தி:

ஸா தீர்த₂வர்யா மணிகர்ணிகா ச

ஜ்ஞான ப்ரவாஹா விமலாதி₃ க₃ங்கா₃

ஸா காஶிகா(அ)ஹம் நிஜபோ₃த₄ரூபா || 1||


பொருள் சுருக்கம்

‘நானே’ இந்த புனிதமான கங்கை. எனது செயலற்றதாய்விட்ட மனமே மணிகர்ணிகா கட்டம். மாசற்ற அளப்பற்கரிய ஆத்மாவே ஞான வெள்ளமான கங்கை நதி. ஆக, ‘ நானே இந்த காசி மாநகரமாகும்’.

விளக்கவுரை

‘காசியில் மரணமடைந்தால் முக்தி’ என்று நம் முன்னோர்கள்சொல்வார்கள்.ஏன்? இதற்கு விடை காண வேண்டுமென்றால் ‘ மரணம்’ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பூதவுடலின்  நாசம் தான் மரணம் என்று நாம சாதாரணமாக நினைக்கிறோம். பூதவுடல் அழியும்பொழுது  நாம் அல்லது நான் அழிவதில்லை. ‘நான்’ இன்னொரு பூதவுடலை தேடிப்போகின்றது.. மீண்டும்மீண்டும் பிறக்கிறோம். ஆகவே மறு பிறப்பில்லாத ஒரு இறப்பு ஏற்படுவது காசியில்த்தான் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் என்று பொருள்கொள்ள வேண்டும். அப்படி காசிக்கு என்ன சிறப்பு?. இங்கு புனித கங்கை ஓடுகிறது. அதன் பிராவஹம் ஞானப்பிரவாகம் போல் நிற்காமல் தொடர்கிறது. காசியில்த்தான் அனேக  ஸ்நானகட்டங்கள் உள்ளன.இந்த கட்டங்களில்த்தான் பூதவுடலை எரித்த சாம்பலை கரைக்கிறோம். இவை நிதரிசன உண்மை.

இந்த கண்கூடாக காணும் உண்மைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் தத்துவார்த்த உண்மையை ஆதி சங்கரர் மிகுந்த கவிதை நடையில் சொல்லியிருக்கிறார் காசி பஞ்சகம் எனும் ஐந்து சுலோகங்களில். முக்கியமாக முதல் சுலோகத்திலேயே தான் சொல்ல வருவதை தெள்ளத் தெளிவாக கூறுகிறார்.

மனோ நிவ்ருத்தி, பரமசாந்தி, மணிகர்ணிகா, விமல் கங்கா, ஞானபிரவாகம் என்ற ஐந்து வார்த்தைகளின் வழியாக இந்து மதத்தின் அடிப்படை தத்துவத்தை நமக்கு புரியவைக்கிறார் சங்கரர்.

கங்கை நதிக்கரையில் அனேகம் கட்டங்கள் இருந்தாலும் மணிகர்ணிகா எனும் படிக்கட்டில்த் தான் பூதவுடலை எரித்த சாம்பலை கரைக்க வேண்டும் என்று நமது முன்னோர் சொல்கின்றனார்.அது ஏனென்றால் மணிகர்ணிகா படிக்கட்டில் முன்னோர்களின் சாம்பலை கரைத்து விட்டு ஸ்நானம் செய்தால் நம் மனதிலுள்ள அழுக்குகளெல்லாம் நீங்கி புனித மடைந்தால், மனம் ஆசாபாசங்கள் எதுவுமில்லாத உண்மையான ஞான சாக்‌ஷாத்காரம் அடைந்து விடும்.அந்த மாசற்ற கங்கை நமது மனதிலுள்ள அழுக்குகளையும் அழித்து விடும்.மனம் அசைவற்று நிஶ்சலமாகிவிடும்.இதைத்தான் மனோ நிவ்ருத்தி என்கிறார் சங்கரர்.

அப்பொழுது மனதில் ஏற்படுகின்ற தெளிவு,’பொய்யுடல் எதுவென அறிந்தேன், இனிமேல் மெய்யுடல் தேடி, ஐயனை அடைய, அம்மா, கங்கா தேவி, நீயே உண்மை அறிவாக என்னுள்ளே ஓடு, உன்னுளே யான் மூழ்கி நிலையான ஒளியை வேண்டுகின்றேன்’ என்ற வெளிபாடு தான் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

மணிகர்ணிகா எனும் படிக்கட்டில்- கட்டத்தில்   எல்லா உடல்களும் எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றன. அந்த அமளியிலும் கூட, அமைதியாக ஒழுகிக்கொண்டிருக்கும் கங்கை நதியை பார்க்கின்ற பொழுது,. இறந்தோர் உடல்கள் எரிந்து, அவிந்து போனவுடன், அங்கே அக்கடமைளைச் செய்பவர் எல்லோருக்கும், பெரிய விடுதலை வருவது போன்ற தெளிவு, ஒரு சில நொடிகளுக்காவது, வருவது உறுதி. அதனாலேயே, ஆதி சங்கரர், மணிகர்ணிகா துறையினை, துயரங்களுக்குக் காரணமான அறியாமையையும், ஆசையையும் முற்றும் அழித்து, நல்ல அமைதி பெற்ற மனதிற்கு உவமையாகக் கூறுகிறார்.

மணிகர்ணிகா படித்துறை, ‘உடலே யான்’ என மயக்கத்தை அறுக்கின்ற தத்துவ பூமியாகும். ‘தேஹம் நாஹம் கோஹம் சோஹம்’ எனும் மந்திரம், ஒரே வரியில் மிகவும் முக்கியமானதும் இரகசியமானதுமான வேதாந்த சாரத்தைத் தருகின்றது. மணிகர்ணிகா இம்மந்திரத்தின் விளக்கமாகவே இருக்கிறது..

தேஹம் என்பது உடல். ‘நான் இந்த உடல் தான்’ என்றே, நம்மில் பலரும் அறியாமையால் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த அறியாமையினாலேதான் நமக்குள் வேறுபாடுகளும், விருப்பு வெறுப்புக்களும், பிறந்து, வளர்ந்து, தளர்ந்து, சிதைந்து போகின்ற உடலினால் பெரும் துயரங்களும் அடைந்து தவிக்கிறோம். ஒருவரின் இறப்பினைப் பார்க்கும் போதாவது, ஒரு சில நொடிகளாவது, மனதிற்குள், உடல் என்பது நிலையற்றது என்னும் எண்ணம் எழுகிறது. அவ்வெண்ணம் ஆழமாகும்போது, பகுத்தறிவு விரிகிறது. அதனால் ஆராயும்போது, வெளியே தெரியும் நமது வல்லுடல் (ஸ்தூல சரீரம்),வெறும் பிண்டம் என்பதும், இதற்குத் துணையான, பிராண, மன, விஞ்ஞான மய கோசங்கள் எனும், மூச்சு, மனம், அறிவு ஆகியவற்றின் கூட்டான மெல்லுடல் – சூக்‌ஷ்ம சரீரம், என்று ஒன்றும் நமக்குள் இருக்கிறது என்றும் அறிகிறோம்.

ஆனால் இந்த மெல்லுடலும் அழிய வேண்டியதே! வல்லுடல் அழியும் போது, மெல்லுடல் வேறொரு வல்லுடலில் புகுந்து, மீண்டும் பிறவி எனும் பிணியில் சிக்கித் தவிக்கின்றதே! இப்படி எல்லாம் தர்ம நூல்களும், பெரியவர்களும் தரும் உண்மைகளைப் படித்தும், கேட்டும் உணர்கிறோம்.

ஆனால் பூதவுடல்கள் அழியாமலே சூக்‌ஷ்ம சரீரம் மட்டும் அழிந்து விட்டால் அதுவும் முக்தி தானே!அந்த முக்தியை தருவது தான் மணிகர்ணிகாவும், புனித கங்கையும் காசி மாநகரமும்.

ஆக ஆசையற்ற- எந்த விதமான செயல்களையும் ஆற்ற முயலாத மனம், முற்றிலும் அமைதியடைந்த மனம் தான் மணிகர்ணிகா எனும் படிக்கட்டு. அங்கு அஞ்ஞானங்கள் அழிந்து ஞானம் பிறக்கிறது.நான் என்பது இந்த பௌதிக சரீரமல்ல; நான் என்பது இந்த மனமுமல்ல ( சூக்‌ஷ்ம சரீரவுமல்ல); என்ற உணர்தல் ஏற்படுவது இந்த மணிகர்ணிகா எனும் படிக்கட்டில்த் தான். பிறந்தும், வளர்நதும்,மாறியும், அழிவதுமான இவ்வுடல்களில், ‘நான் மட்டும் மாறாமல் இருக்கிறேனே’ எனும் அறிவின் வியப்பு எப்போதேனுமாவது மனதில் தோன்றும். அவ்வியப்பே, ‘நான் இத்தகைய, மாறி, மாறி அழியும் உடலில் மாட்டிக் கொள்ளும் காரணம் என்ன’ எனும் வினாவையும் எழுப்பும். இப்படி மெல்லுடலும், வல்லுடலும் வழக்கத்தில் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டு ‘ நான் யார் ‘என்று நாம் ஆராயும் பொழுது, ‘காரண உடல்’ என மற்றொரு உடலும் இருக்கிறது, அந்தக் காரண உடல், நமது அறியாமையாலும், ஆசையால் செய்யும் செய்வினைகளின்( கர்மங்களின்,) விளைவுகளாலும் (கர்ம பலன்களாலும்) விதைக்கப்பட்டு முளைவிட்டு வளர்கிறது என்றும் அறிகிறோம்.

அதனால், தேஹம்  வெறும் பூதவுடல் மட்டுமல்ல; அது  வல்லுடல், மெல்லுடல், காரணவுடல் எனும் இம்மூன்றும் சேர்ந்தது தான் என்பதும் தெரிகிறது. ‘தேஹம் நாஹம்’ எனும் வாக்கியம், இம்மூன்று உடல்களும் நான் அல்ல என்று உணர்த்துகின்றது. அப்புறம் நான் யார் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அப்படியானால் நான் யார்? கோ அஹம்?

இந்தப் பெரிய கேள்விதான் பகவான் ரமண மகரிஷியை நமக்குக் கொடுத்தது. இக்கேள்விக்கு விடை தேடுவது என்பது, ‘தேஹம் நாஹம்’ எனும் ‘நான் உடல் இல்லை’ என்ற வாக்கியத்தை முற்றும் உணர்வதிலேயே அடங்கி இருக்கிறது. மணிகர்ணிகா துறையிலே செய்கின்ற உடல் அவிப்பு என்பது, தேஹம் நாஹம் எனும் மந்திரத்தின் அறிவால் உடலாசைகளை இழத்தல், அதனால் மனதில் ஆசைகளை அழித்தல் என்பதற்கு உவமை என்று காட்டுகின்றார் பகவான் ஆதி சங்கரர்.

அங்கு புனித நீராடும் பொழுது எனது அழுக்குகளெல்லாம் அழிந்து புனித கங்கை நதி போல் என்னுள் ஞானப்பிரவாகம் பெருக்கெடுத்து ஓடும்.அப்பொழுது ஏற்படும் தன்னுணர்வு தான் ஆத்மசாக்‌ஷாத்காரம்.அந்த ஆத்மா தான் என்றும் எப்பொழுதும் ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கின்ற காசி நகரம். நிஜ போத சொரூபமே(ஆத்மாவே) காசி மாநகரம்.ஆகவே அந்த காசியைக் கண்டால் முக்தியுறுதி. 

அந்த காசியை அடைவதற்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்ய வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே மனதை தூய்மைப்படுத்தி மாசற்றதாக்கி- விமல கங்கையாக்கி நிஜ போத சொரூபத்தை உணர்ந்து விட்டால் நாம் காசியை அடைந்து விட்டவர்களாகி விடுவோம் என்கிறார் ஆதி சங்கரர்.

இந்த முதல் பாடலிலே, காசியின் பெருமையை ஆதி சங்கரர்  மிகுந்த காவிய நயத்துடன் விளக்குகின்றார். மணிகர்ணிகாவும், விமல கங்கை,ஞானப்பிரவாகம், காசிநகரம் என்ற நான்கையும் இணைக்கும் முதல் பாடல் ஒன்றை மட்டுமே புரிந்து கொண்டு நாம் தீர்த்த யாத்திரைகளைச் செய்தாலே, கடனுக்காகவோ, கடமைக்காகவோ செய்கின்ற செயலாக அவை இல்லாமல், முழுமையான ஆன்ம அறிவுச் சாதனையாக அமையும். அதுவே ஆத்ம சாக்‌ஷாத்காரத்திற்கு வழி வகுக்கும்.

இறுதிப் பாடல் வரை படித்து முற்றும் உணர்ந்து கொண்டாலோ, தீர்த்த யாத்திரை என்று வெளியில் எதுவும் செய்யாமலேயே, சத்திய சாக்‌ஷாத்காரம் எனும் புனித நிலையை நாம் அடைய முடியும் என்பதும் விளங்கும்.
.