ஞானப்பானா—கிருஷ்ண கீதை-1

ஞானப்பானா—கிருஷ்ண கீதை-1

ஞானோதயம்

                  கிருஷ்ண கிருஷ்ணா! முகுந்தா ! ஜனார்த்தனா!

                   கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே !!

                   அச்யுதானந்த கோவிந்த மாதவா!

                   ஸச்சிதானந்த நாராயண ஹரே!!

இவ்விதம் ஆரம்பிக்கின்ற ஒரு பக்தி கானத்தை நம்மில் பலரும் கேட்டிருப்போம். இந்த நாம சங்கீர்த்தனம் தான் ஞானப்பானா என்ற மலையாள பக்தி காவியத்தின் ஆரம்ப வரிகள்.

ஞானப்பானா என்றால் ஞானக்களஞ்சியம்,அறிவு பெட்டகம் என்று பொருள்..கிருஷ்ணா என்ற நாமத்தில் எல்லா ஞானமும் அடங்கும் என்று கூறுகின்ற இந்த பக்தி காவியம், வேத-வேதாநதங்களில் காணும் உயரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது..

இந்த நூலை எனக்குத் தெரிந்த அளவில் விளக்கிக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நூலின் தோற்றம்

ஞானப்பானா என்கின்ற பக்தி நூல் பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு மலயாள பக்தி காவியம் .இதை எழுதியவர் பூந்தானம் இல்லத்தைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி.அவர் ‘பூந்தானம்’ என்ற அவரது இல்லப் பெயராலேயெ பிற்காலத்தில் அறியப்பட்டார்.அவரது இயற்பெயர் சரியாக தெரியவில்லை.‘நாராயணீயம்’ என்ற சம்ஸ்கிருத நூலை எழுதிய நாரயண பட்டதிரிப்பாடின் சமகாலத்தவர் பூந்தானம்.ஞானப்பானா எல்லோருக்கும் புரியும்படியான எளிய மலயாளத்தில் ஒரு பக்தி காவியம்.பக்தியோடு ஞானத்தையும் கலந்து நமக்கு அளித்துள்ளார் பூந்தானம்.

இந்த பக்தி காவியம் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, பஜ கோவிந்தம் விவேக சூடாமணி முதலிய தார்சனிக கிரந்தங்களின் சாரம்சத்தை பக்தியில் குழைத்து தருகிறது..இதை மலையாள பகவத் கீதை என்று கூறுவோரும் உண்டு

குருவாயூரப்பனின் மஹாபக்தரான இந்த கவிவரியர் 1547 மாசிமாதம் அசுவதி நட்சத்திரத்தில் கேரள  நாட்டில்  மலப்புறம் ஜில்லாவில் கீழாற்றூர் எனும் இடத்தில் பூந்தானம் எனும் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தார்.அவரது இருபதாவது வயதில் திருமணம் ஆயிற்று.ஆனால் நீண்ட நாட்களுக்கு அவருக்கு சந்தான பாக்கியம் கிட்டவில்லை.ஆகவே குருவாயூரப்பனை தியானித்து ‘சந்தான கோபாலம்” சுலோகங்களை சொல்லிவந்தார்.அதன் பயனாக அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இல்லத்தில் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்து ஆனந்த்தித்தார்கள்.ஆனால் தெய்வ நிச்சயம் வேறு ஒன்றாக இருந்தது. குழந்தைக்கு ஒரு வயதாகும் முன் அன்னபிராசனத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கவே குழந்தை இறைவனடி சேர்ந்தது. குழந்தையின் மறைவைக் குறித்து நிறைய கதைகள் சொல்லக்கேட்டிருப்போம். அவைகளில் மிகவும் நமபத் தகுந்ததாக நான் கருதுவது கீழ்க்கண்ட கதை.

சாதாரணமாக கேரள மானிலத்தில் அன்னப்பிராசனம் எனும் ‘சோறூணு” குழந்தையின் 5-7 மாதங்களில் நடைபெறும். பூந்தானத்தின் செல்வனுக்கு சோறூணுக்கு ஏற்பாடுகள் அவரது இல்லத்தில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது

.இந்த இடத்தில் கேரள நம்பூதிரி இல்லங்களின் கட்டமைப்பைக் குறித்து ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டியுள்ளது.

இல்லங்களின் முன்புறம் தாழ்வாரம், அதன் பின் பூமுகம், பிறகு அகத்தளம்,அதன்பின்னால் வடதிசையில் ‘வடக்கினி’ எனும் அறை, தெந்திசையில் ‘தெற்கினி’ எனும் அறை, ‘வடக்கினியின் பின்னால் சமயலறை என்றவாறு இருக்கும். இதில் ‘தெற்கினி’ காற்றோட்டமாக ஜன்னல்களுடன் விசாலமாக இருக்கும்.’வடக்கினியோ’ இருளடைந்து இரு வாசல்களுடன் இருக்கும்.ஒரு வாசல் அகத்தளத்திற்கு திறக்கும்; இன்னொரு வாசல் அடுக்களை அல்லது சமயலறைக்கு திறக்கும்.அகத்தளத்திற்கு திறக்கும் கதவு எப்பொழுதும் மூடியே இருக்கும்.

அன்றைய தினம் பூந்தானத்தின் இல்லத்தம்மை குழந்தைக்கு பாலூட்டிவிட்டு குழந்தை தூங்கியவுடன் வடக்கினியில் குழந்தையை விட்டு விட்டு  அடுக்களைக்கு செல்லும் கதவை மெல்ல சாத்திவிட்டு சென்றாள். மற்ற பெண்டிர் ஒவ்வொருவராக குளித்துவிட்டு வடக்கினிக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு உடை மாற்றிக்கொண்டார்கள்.அங்கே விதி விளையாடியது. முதலில் சென்ற பெண்மணி குழந்தை இருப்பதை கவனிக்காமல் ஈர உடையை குழந்தையின் முகத்தின் மீது போட்டுவிட்டாள். அடுத்து வந்த பெண்டிரும் தம் தம் ஈர உடைகளை அதன் மீதே போட்டார்கள்.

சோறூணிற்கு நேரமானபோது பூந்தானத்தின் இல்லத்தரசி குழந்தையை கொண்டுவருவதற்காக வடக்கினிக்குள் சென்றாள். அந்தோ, பரிதாபம்! குழந்தை மூச்சுத்      திண்றி இறந்து உடல் சில்லிட்டு படுத்திருந்தது.

பிறகு அங்கு நிகழ்ந்த சோகக் கதறல்களை விவரிகவும் வேண்டுமோ!

துயரத்தில் ஆழ்ந்த பூந்தானம் குருவாயுரப்பனை சரணடைந்தார். குருவாயூர் கோவிலில் இருந்து கொண்டே ‘குமாரஹரணம்’ என்ற நூலை இயற்றினார்.

ஒருமுறை குருவாயுரப்பனே குழந்தை உருவத்தில் அவர் மடியில் வந்தமர்ந்ததாகவும் மனதில் பரமனே இருக்கும்பொழுது துயரத்திற்கு ஏது இல்லை என்ற ஞானம் பிறந்ததாகவும் ஐதீகம்.

அவருடைய கீழ்க்கண்ட வரிகள் இந்த உண்மையை எடுத்து விளம்புகின்றன.

                        உண்ணிக்கிருஷ்ணன் மனஸில் களிக்கும்போள்

                        உண்ணிகள் மற்று வேணமோ மக்களாய்

அதன் பின் நாமஜபமே முக்திக்கு வழி என்று கருத்துப்பட ‘ஞானப்பானா’வை இயற்றினார்.

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s