யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 2
தினமொரு சுலோகம்
நாள் 2 துர்முகி வருடம் சித்திரை 2 ஏப்ரில் 15 ,2016
2.நூலின் மூலக்கருத்துக்கள்
யோகவாசிஷ்டம் ஏக தெய்வ தத்துவதை பிரதானமாக்கி விளக்குகின்ற நூல்..
யோகவாசிஷ்டம் நமது –சகல சராசரங்களின் இருப்பிற்கும் அடிப்படையான சத்தியத்தை யுக்திக்கு-பகுத்தறிவிற்கு ஏற்றார்ப்போல் தனியாக எடுத்துரைக்கின்ற சாஸ்திர கிரந்தம்.
வேதாந்தங்கள் –வேதங்களின் முடிவானவை- என்றுகூறப்படும் உபனிஷத்துக்களில் காணப்படுகின்ற சத்தியம் தான் இதிலும் சொல்லப் பட்டிருக்கிறது.
பிரமம் தான் பிரபஞ்ச சத்தியம் என்று உபனிஷத்துக்கள் உரைக்கின்றன. பிரமம் என்றால் பிரபஞ்சமாக விரியும் பொருள் என்று கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட பொருளின் சொரூபம் என்ன என்று நம்மில் பலருக்கும் புரிவதில்லை. வாசிஷ்டம் இதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஆகவே தான் எந்த நூலிலும் காணாத நூலின் மஹத்துவம் நூலிலேயே கூறப்பட்டுள்ளது:
கிஞ்சித் சம்ஸ்க்ரிதபுத்தீனாம் ஸ்ருதம் சாஸ்த்ரமிதம்யதா
மௌர்க்யாபஹம்ததா சாஸ்த்ரமன்யதஸ்தி நகிஞ்சன
किन्च्चित् सम्स्क्रितबुद्धीनाम् श्रुतम् शास्त्रमिदम्यधा
मौर्ख्यापहम्तथा शास्त्रमन्य्दस्ति नकिन्जन !
லகு யோகவாஸிஷ்டம் 2-1-56
“ஒரளவிற்கு ஞான வேட்கையுள்ள ஒருவனுக்கு ஸ்ரவணத்தால் அக்ஞானத்தை அகற்றுவதற்கு உதவுகின்ற சாஸ்திர நூல் இதைப் போல் வேறொன்றில்லை”.
அஞ்ஞானம் அகன்று ஞானம் பெறுவது என்பது பிரம்மத்தை உணருதலும் அதன் சொரூபத்தை புரிந்துகொள்வதும் அதன் மூலம் இந்த ஜகத்தின் உண்மையான நிலை என்ன என்று புரிவதும் தானே !
ஆரம்பவும் முடிவும் இல்லாததும், பகுத்துக் காணமுடியாத்தும்(அகண்டம்) நிச்சலமானதும் நிரந்தரமானதுமான போதம்- சத் உணர்வு தான் பிரமம்.
யோகவாஸிஷ்டம் என்ற இந்த சாஸ்திர நூல் ஆத்மசாக்ஷாத்காரத்திற்கு- இந்த பிரம்ம ஞானத்தை பெறுவதற்கு மிகவும் உதவக்கூடிய சத்தியத்தின் நேரடி அனுபவங்களை விளக்குகிறது.அதைத்தான் நீங்கள் தேடுகின்றீர்களென்றால் உங்களுக்கு நல்வரவு.
3.நூலின் பாணி
இந்த நூலில் பலகருத்துக்களும் அவை மனதில் திடமாக பதிய வேண்டுமென்பதற்காக திரும்ப திரும்பச் சொல்லப்பட்டுள்ளது. யாருக்காவது அது விரசமாகத் தோன்றினால் சுலோக சுருக்கத்தை மட்டும் படித்துக்கொள்ளலாம்.
.ஆகாயத்தின் நீல வண்ணம் நம் கண்கள் விளைவிக்கும் ஒரு பிரமமே என்பது போல் நமது இந்த பிரபஞ்ச வாழ்வும் மிகவும் கலக்கமான சிந்தனையை தோற்றுவிக்க கூடியது. ஆகவே பிரபஞ்சத்தைக் குறித்தும் அதன் உற்பத்தியைக் குறித்தும் அதிகம் சிந்திக்காமல்,இருப்பதே நலம். இந்தக் கருத்து இந்த நூலில் பலயிடங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது. யோக வாசிஷ்டத்தின் மூலக் கருத்தும் இது தான் என்று தோன்றுகிறது. இது சரியாகப் புரியவில்லை என்றால் நூலை முழுவதையும் திரும்ப திரும்ப படிக்கவும். இந்தக் கருத்தை வால்மீகி முனிகள் பல விதமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். அவை உங்கள் உள்ளங்களின் கதவுகளைத் திறக்க உதவும்.
தினமும் இந்த நூலின் ஒரு பக்கத்தையேனும் படித்தீர்களையானால் ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான வழி வெளிப்படும்,.. நம் மனதில் பல் விதமான எண்ணங்களும் நம்பிக்கைகளும் வாசனைகளும் திடமாக உறைந்து கிடப்பதாலும் இந்த் நூலின் கருத்துக்கள் தீவிர சிந்தனைக்குட்ப்படுத்த வேண்டியவைகளாக இருப்பதாலும் படித்து விட்டு அதைக் குறித்து அலசி ஆராய வேண்டியது அவசியமாகிறது. தினசரி பாராயணத்தாலும் மனனத்தாலும் தான் இதன் கருத்துக்கள் நம் உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று உறையும்-பதியும்.
இந்த ஞானோபதேச கிரந்த்த்தில் ‘காகதலீயம்’ என்ற ஒரு கற்பனை பல இடத்திலும் காணலாம்.ஒரு காய்ந்த தென்னமட்டையில் ஒரு காகம் உட்கார்ந்திருக்கிறது. திடீரென் அதன் தலையில் ஒரு முற்றிக்காய்ந்த தேங்காய் விழுகிறது. காகம் தென்ன மட்டையில் உட்கார்ந்திருந்த்தற்கும் தேங்காய் விழுந்ததற்கும் யுக்திபரமான எந்த தொடர்பும் இல்லை. இருந்தாலும் நம் மனம் ஒரு தொடர்பை கற்பனை செய்துகொள்ளுகிறது. அதேபோல் தான் பிரபஞ்ச வாழ்வும் பிரபஞ்ச சிருஷ்டியும் தொடர்புடையவையாக நம் மனதில் படுகிறது. இப்படிப்பட்ட ஒரு கற்பனையான பகுத்தறிவு வாதத்தில் அகப்பட்டுக்கொண்டு, ‘ஏன்?”,”எப்படி?”’எங்கிருந்து’ போன்ற பல கேள்விகள் எழுந்து மனதில் கலக்கத்தை உண்டுபண்ணுகிறது. அதற்கான பதிலையும் நம்து புத்தி உற்பத்தி செய்கின்றது.ஆனால் இவையால் பூரண திருப்தியடையாத மனித மனம் மேற்கொண்டு பல கேள்விகளால் அலைக்கழிக்கப்படுகின்றது.