சுலோகம் 2
यस्यामिदं कल्पितमिन्द्रजालंचराचरं भाति मनोविलासम्।
सच्चित्सुखैका परमात्मरूपा
सा काशिकाऽहं निजबोधरूपा ॥२॥
யஸ்யாமித₃ம் கல்பிதமிந்த்₃ரஜாலம்
சராசரம் பா₄தி மனோவிலாஸம் |
ஸச்சித்ஸுகை₂கா பரமாத்மரூபா
ஸா காஶிகா(அ)ஹம் நிஜபோதரூப
பொருள் சுருக்கம்
மனதின் இந்திரஜாலம் தான் கற்பனையில் தோன்றும் எல்லா உயிரினங்களும், அவை வாழுகின்ற இந்த பிரபஞ்சமும்.உண்மையில் இருப்பது பரமாத்மா ரூபமான ஆத்மா ஒன்று தான்.அந்த நிஜ போத ஸ்வரூபம் தான் காசி மாநகரம்.
விளக்கவுரை.
இந்த பிரபஞ்சமும் அதில் தோன்றி மறையும் உயிரினங்களும் வெறும் கற்பனையே. அந்த பிரமைக் காட்சிகள் தோன்றுவதோ மனதின் இந்திரஜாலத்தாலத் தான். அவையெல்லாம் தோன்றுவது நம் போதஸ்வரூபத்தில்த் தான்.
சினிமாப் படத்தை நாம் திரையில் காண்கின்றோம். அதில் மனிதர்களும் மற்ற அசையும் அசையாப் பொருட்களும் வருகின்றன; போகின்றன; அழுகின்றனர்; சிரிக்கின்றனர். புரொஜக்டரை ஓட்டுபவன் அதை நிறுத்தும் பொழுது திரை வெறுமையாக காட்சியளிக்கின்றது. அங்கு எதுவும் இல்லை. அது போல் மனம் அமைதியடைந்து தனது செயல்களை நிறுத்திக் கொள்ளும் பொழுது அங்கு மாசற்ற வெண் திரை மட்டும் தான் காணப்படுகிறது. அது தான் நிர்மலமான ஆத்மா. அது வரை நாம் கண்ட காட்சிகளெல்லாம் ஆத்மாவிலேயே உருவான காட்சிகள். மனமெனும் அவித்யையால் உளவாக்கப்பட்ட பிரமைகள் தான்.அவை எதுவும் உண்மையில்லை. நித்தியமுமில்லை. அவை ஓடி மறையக்கூடிய சினிமாக் காட்சிகள் போன்றது தான்.
நாம் காணும் கனவுக்காட்சிகளும் இது போல்த் தான். நமக்குள்ளேயேதான் மழை பெய்கிறது; வெயில் அடிக்கிறது; நாம் அழுகிறோம்; சிரிக்கிறோம்; நடக்கிறோம்; ஓடுகிறோம்; நிற்கிறோம்; உட்காருகிறோம்; சண்டை போடுகிறோம்; நட்பு பாராட்டுகிறோம். எல்லாமே நமது உறக்கம் கலைந்து விழித்தெழுந்திருக்கும் வரைத் தான். விழித்து எழுந்து விட்டால் நாம் நாமாக இருக்கிறோம். அது போல் அவித்யை எனும் இருள் நம்மை பிடித்துக் கொண்டிருக்கும் வரைத்தான் இந்த பிரபஞ்சமும் அதன் அனுபவங்களும் இருக்கும். அவித்யை எனும் இருள் அகன்று விட்டால் மீதமிருப்பது மாசற்ற ஆத்மா மட்டும் தான்.
ஆனால் இந்த பிரபஞ்ச வாழ்வில் கனவு நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு -ஜாக்ரத் நிலைக்கு-வரும்பொழுது ‘ நான்’ எனும் அஹமும் விழித்து எழுந்திருக்கிறது; ‘ நான்’ இந்த சரீரம் தான் என்று நம்ப ஆரம்பித்து அதன் விளைவுகளை அனுபவிக்கின்றது. இதெல்லாம் மனதின் சேஷ்டைகள் தான்; மனோ விலாசங்கள் தான்; மனதின் லீலைகள் தான்.மனம் ஓயும்பொழுது மறைந்து போகின்ற சினிமா ப் படம் தான்.அவை உண்மையல்ல.
பிறகு உண்மை தான் என்ன? அது தான் சத் சித். சத்சிதானந்தனை தரும் ஆனந்தம் தான் நித்தியம், நிரந்தரம், அழிவில்லாதது.அந்த சத்திய மான சித் தான் பரமாத்மா ரூபமான ஆத்மா. அது தான் நமது உண்மையான ரூபம். அது தான் காசி மாநகரம். இந்த காசிமாநகரத்தை தரிசிப்பது தான் நமது இலட்சியமாகிய இருக்க வேண்டும்.
உண்மையைப் போல் தோன்றும் இந்த பிரபஞ்ச காட்சிகளெல்லாம் அந்த பரமாத்மாவிலிருந்து உளவானது தான். எப்படி உளவாயிற்று என்று வார்த்தைகளால் விளக்க முடியாது. மனதின் மாயா சக்தியினால் உண்மை போல் தெரியும் கற்பனைகளும் அதில் தெரியும் அசையும், அசையா உடல்களாக விளங்கும் வெளி உலகங்களும், (அவற்றின் அனுபவங்களாக) மனதுள் விரியும் உள் உலகங்களும் அந்த பரமாத்விலிருந்து உருவானவை தான். அந்த பரமாத்மா மட்டும் தான் உண்மை. அந்த பராத்மாவே ‘நான்’.அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே. ஒன்றன்றி வேறில்லை.
அதுவே சத்தியம். அதாவது, மாறாது எப்போதும் சுயமாக ஒளிர்நது கொண்டு விளங்குவது. அது சித் அல்லது முழுமையான நிச்சயித்த அறிவு. அது ஸுகம் அல்லது பேரின்பநிலை. அதுவே சத்சிதானந்தன். (தன்னொளி பரப்பி யாவற்றையும் உயிர்க்கும் ஆன்மாவாகத் தன்னை உணர்ந்து கொண்டதன் பயனால்) ஆத்மாவாகிய நானே (ஒளி மையமான) காசி நகரம்.
இந்த சுலோகத்தில் அத்வைத தத்துவத்தின் சாரமான இரண்டு உண்மைகளை பகவான் ஆதிசங்கரர் வலியுறுத்துகின்றார்.
முதலாவது பிரம்மம் ஒன்றே சத்தியம், ஜகம் மித்தியை என்பது. அதாவது, பரம்பொருளான பிரம்மம் ஒன்றே எப்போதும் நிலைத்து விளங்குவது. அதனால் அது ‘சத்தியம்’. மற்றவை எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்ற உலகங்கள். அம்மாற்றம் ‘மித்தியை’ , அழியக்கூடியவை..
இந்த உலகங்கள் இருவகை. வெளியில் தெரிகின்ற உலகங்கள் ஒரு வகை, நம் ஒவ்வொருவருடைய மனதிலும் அனுபவித்து உணர்கின்ற உலகங்கள் ஒருவகை. வெளி உலகங்களில், அசையும் உடல்களான உயிரினங்களும், அசையாத உடல்களான பொருட்களும் விளங்குகின்றன. இவை எல்லாம் பிறந்தும், வளர்ந்தும், தளர்ந்தும், சிதைந்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த வெளி உலகங்களைப் பார்த்து, அதனால் பலவித அனுபவ நிலைகளைத் தன்னுள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, நாமெல்லாம் மனதுக்குள் வேறு வகையான உலகங்களையும் படைத்துக் கொள்கிறோம். அதனாலேதான் ஒரே வெளிஉலகத்தை, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பார்க்கிறோம்.
மாற்றம் என்பது இருக்க வேண்டும் என்றால், அப்படி மாறுகின்ற ஒன்று இருக்க வேண்டும்; அது மாற்றமில்லாத ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வெளி, உள் உலகங்கள் எல்லாம், சத்தியமான பிரம்மத்தைச் அடிப்படையாகக் கொண்டே மாறுகின்றன. அனுபவிக்கப்படுகின்ற உலகங்கள் எல்லாம், பிரம்மத்தினுடைய விளக்க முடியாத மாயா சக்தியினால், கற்பனையாகப் படைக்கப்பட்டவை என்பதே ‘பிரம்மம் சத்தியம், . !ஜகம் மித்தியம்’ எனும் அத்வைத சித்தாந்தம்..
இரண்டாவது அத்வைத உண்மை, ‘தத்வமஸி’ அல்லது ‘அஹம் பிரம்மாஸ்மி’ அதாவது ‘அது நீயே’ அல்லது ‘யானே பிரம்மம்’ எனும் வேதாந்தக் கோட்பாடு. அந்தப் பிரம்மமும், எல்லா உயிர்களுள்ளும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவும் ஒன்றே. பரம ரூபம், ஆத்ம ரூபம் இரண்டும் ஒன்றே என்பதே, பரமாத்மரூபம் எனும் சொல்லினால் காட்டப்பட்டது. அந்த வடிவமே ‘ஸத் ரூபம்’, ‘சித் ரூபம்’, ‘ஸுக ரூபம்’ எனக்காட்டி, பரமாத்மா நிலையானதும், முழுமையான அறிவானதும், மாறாத பேரின்பமானதுமான சச்சிதானந்தம் என்று பகவான் ஆதிசங்கரர் இப்பாடலிலே வலியுறுத்துகின்றார்.
இவ்வுண்மையை முற்றும் உணர்ந்து ஜீவன் முக்தர் எனும் நிலையை அடைவது நமது இலட்சியமாகிய இருக்க வேண்டும். சச்சிதானந்த ரூபமான பரமாத்மாவைத் சாக்ஷாத்கரிப்பது, ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவது, சத்திய சாக்ஷாத்காரம் அடைவது நமது வாழ்வின் இலட்சியம்.அப்படி அடைவதன் மூலம் நிரந்தரமான ஆனந்தத்தை பெறமுடியும். ஆகவே நிஜ ஸ்வரூபமாகிய சத்சிதானந்தனை பரமனை, பரமாத்மாவை , காசிநகரத்தை தரிசிப்பது, உணருவது தான் நமது வாழ்வின் இலட்சியமாகிய இருக்க வேண்டும்.