அஷ்டாவக்கிரமணிகள்

Wednesday, 29 July 2015அஷ்டாவக்கிர மணிகள்

 அஷ்டாவக்கிர மணிகள்
மணி 1 ஓசை 5

சாஸ்திரம் பொய்ப்பதில்லை !

கதம் ஞானமவாப்நோதி

கதம் முக்திர்பவிஷ்யதி

வைராக்யம் ச கதம் ப்ராப்த

மேதத் ப்ருஹி மம ப்ரபோ!
ஞானத்தை எவ்வாறு அடைவது? மோக்ஷம்( முக்தி) எவ்வாறு பெறுவது? எவ்வாறு வைராக்யத்தை உறுதிப் படுத்திக் கொள்வது? என்கின்ற ஜனகரின் மூன்று முக்கியமான கேள்விகளுடன் துவங்குகின்ற அஷ்ட வக்கிர சம்வாதம் 20 அத்தியாயங்களில் முன்னூற்றிற்கும் மேற்பட்ட சுலோகங்களாக விரிவடைந்து உலக சிருஷ்டி தத்துவத்தையும் ஆத்ம சாக்ஷத்காரம் அடைவதற்கான வழி முறைகளையும் தெளிவாக விவரிக்கின்றது.

பகவத் கீதை போன்ற விரிவான நூல் அல்ல இது. என்றாலும் மிகவும் சுருங்கச்சொல்லி புரியவைக்கின்ற நூல் இது.
எல்லா மிதிலை மன்னர்களையும் ஜனகர் என்றே அந்த நாட்களில் கூறி வந்தார்கள். ராமாயண சீதா பிரட்டியின் தந்தை ஜனகனும் அந்த வரிசையில் வந்த ஒரு மிதிலாதிபதி தான். .ஆனால் இந்தக் கதை சீதாபிராட்டியின் தந்தை ஜனகர் சம்பந்தப் பட்டதாக தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் உறுதி: அன்றைய அரசர்கள் ராஜ்ய பரிபாலனத்தில் மட்டுமல்லமல் வேத-வேதாந்தங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள்.
மேற்கூறிய கேள்வியை கேட்ட ஜனகர் வேத-வேதாந்த பயிற்சியில் முதற்படியில் நிற்கின்ற மாணவனல்ல. நன்றாக கற்றறிந்தவர். அறிவு வேறு, ஞானம் வேறு, என்று புரிந்துகொண்டு மேற்கண்ட கேள்விகளை கேட்கிறார்.
ஆகவே அஷ்டவக்கிரரின் பதில்களும் வேதாந்தத்தின் அரிச்சுவடியாக இல்லாமல் ஒரு உயரிய நிலையிலேயே ஆரம்பிக்கின்றது

   முக்திமிச்சசி சேத்தா த

விஷயான் விஷவ்த்ய ஜ

க்ஷமா ர்ஜ்ஜவதயா தோஷ

சத்யம் பீயூஷ வல் பஜ

அஷ்டவக்கிரர் நேரடியாக பதில் கூறுகிறார்:

“குழந்தாய், உனக்கு முக்தி வேண்டுமென்றால், நீ விஷயங்களிலுள்ள வாசனைகளை விஷம் என புறந்தள்ள வேண்டும். நீ க்ஷமை( பொறுமை), ஆர்ஜ்ஜவம் (நேர்மை), தயா (கருணை), சம்திருப்தி( போதும் என்ற மனம்), சத்யம என்கின்ற குணங்களை அமுது போல் கைவரிக்க வேண்டும்
அஷ்டவக்கிரரின் இந்த பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது இஹலோக விஷயங்களால் ஒரு பொழுதும் நாம் திருப்தி அடைய முடியாது. நிறைவு என்பது கானல் நீராகத் தான் இருக்கும். விஷய வாசனைகளை விட்டொழித்தால்த் தான் நிரந்தரமான மகிழ்ச்சியையும் நிறைவையும் பெறமுடியும். உலக விஷயங்களில் ஈடுபட ஈடுபட நமது அவைகள் மீதுள்ள ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அவைகளை விஷம் போல் ஒதுக்க வேண்டும்.
இதன் பொருள் உலக விஷயங்களை அறவே தவிர்க்க வேண்டும் என்பதல்ல; அப்படி ஒதுக்கினால் அந்த ஆசைகள் மீண்டும் மிகவும் அதிக சக்தியுடன் முளைத்து புறப்படும்..

அந்த விஷயங்களால் கிடைக்க கூடிய மகிழ்ச்சி நிலையானதல்ல என்று புரிந்து கொண்டு, அவை விஷ சமானமானவை என்று உணர்ந்து அவைகளிலுள்ள ஈடுபாட்டை குறைத்துக் கொண்டே வந்து ஒரு நாள் அறவே ஒழித்து விட வேண்டும் என்பது தான்.

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு ஒப்ப அதற்கு ஆறு குணங்கள் அவசியம்

அவை தான்,

பொறுமையும் விடா முயர்ச்சியும்,

மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம், அல்லது சகிப்புத்தன்மை,

எதையும் நேர்வழியில் அணுகும் மனபக்குவம்,

 பிற உயிரினகளிடம் அன்பும் கருணையும் ,

எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையை கடைபிடிக்கின்ற துணிவு.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிடவேண்டும். சத்யம் என்றால் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல.

மற்றவர்களுக்கு எது நன்மை பயக்குமோ அது தான் சத்யம். நன்மை பயக்க கூடியது என்றால் அவர்களுக்கு பிரியமானது என்று பொருளல்ல. அவர்களுக்கு அப்பிரியமானதாக இருந்தாலும் நாளடைவில் அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அதைத்தான் நாம் சொல்ல வேண்டும்,ஆதரிக்க வேண்டும்.
அஷ்டவக்கிரர் இந்த சம்வாதத்தில் நிறைய இடங்களில் ஜனகரை கண்டித்து அவரது தவறுகளை சுட்டிக் காட்டி கடைசியாக ஜனகரின் அஹந்தையை அழித்து அவருக்கு ஞான ஸாக்ஷாத்காரம் பெறும்படி செய்கிறார்.

இப்படிப்பட்ட இந்த சம்வாதம் தோன்றுவதற்கான சூழ் நிலை மிகவும் சுவாரசியமானது. எப்படி ஒரு குருவால் ஒரு சில நொடிகளில் ஒரு உத்தம சீடனை உண்மையை புரிய வைக்க முடியும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இந்த கதை.
ஜனகர் மிகுந்த அறிவாளி என்றும் அவர் எப்பொழுதும் வித்துவான்களை தனது அரசவையில் ஆதரித்து வந்தார் என்றும் கூறினோம் அல்லவா?

அதன்படி தினமும் ஒரு பிரம்மசாரி வேதங்களை ஜனகர் முன்னிலையில் படித்துக் காண்பிப்பது வழக்கம் ஒரு நாள் வேதத்தில் வருகின்ற கீழ்கண்ட வாக்கியத்தை அவன் படித்தான்:
“குதிரையின் அங்கவடியில் ஒரு காலை வைத்து ஏறி இரண்டாவது காலை உயர்த்துவதற்கு முன் பிரம்மஞானம் பெறலாம்.”

ஜனகனுக்கு இந்த வாக்கியம் உண்மையாக இருக்க முடியாது என்று தோன்றியது.

ஆகவே திரும்பத் திரும்ப இந்த வாக்கியத்திலுள்ள பொருள் கற்பனை இல்லையே என்று கேட்டான். அந்த பிரம்மசாரியும் ,”ஆமாம், உண்மை தான்”. என்று கூறினான்.

“அப்படியானால் நிரூபித்து காட்டு, நான் ஒரு குதிரையை வரவழைக்கிறேன்,” என்றான் ஜனகராஜன்.

அதற்கு அந்த பிரம்மசாரி,’’எனக்கு அவ்வளவு திறைமை இல்லை. ஆனால்,அந்த வாக்கியம் பொய்யில்லை.” என்று பதில் கூறினான்.

ராஜா அந்த பையனை சிறையிலிட்டார். பிறகு அரசவையிலுள்ள ஒவ்வொரு பண்டிதர்களிடமும் அதே கேள்வியை கேட்டான் ஜனகன்.

எல்லோரும் ஒரே மாதிரியான பதிலையே கூறினார்கள்.

“அந்த வாக்கியம் உண்மை, ஆனால் அதை நிரூபிக்கக் கூடிய திறமை என்னிடம் இல்லை.”

அரசன் அவர்கள் எல்லோரையும் சிறையிலிட்டான்.

எந்த ஒரு பண்டிதன் மிதிலா நகருக்கு வந்தாலும் அதே கதி தான்.

அப்படியிருக்கும் பொழுது ஒரு நாள் அஷ்டாவக்கிர மகா முனிகள் மிதிலா நகரின் கோட்டைக்கு வெளியே ஒரு மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தார். அங்கு வந்த பிராம்மணர்களிடம் இந்த நாட்டை ஆளும் ராஜா எப்படிப்பட்டவர்? மிகுந்த அறிவாளியா? தான தருமம் செய்யக் கூடியவரா? என்றெல்லாம் கேட்டார். அவர்கள் அங்கு நடக்கின்ற சம்பவத்தை விவரமாக கூறினார்கள்.

முனிகள் அவர்களிடம், “எப்படியாவது ஒரு பல்லக்கிற்கு ஏற்பாடு செய்து என்னை ராஜனிடம் அழைத்து செல்லுங்கள்,” என்றார்.

“அந்த சாஸ்திர வாக்கியத்தை நிரூபித்து சிறையிலிருக்கும் எல்லா பண்டிதர்களையும் விடுவிக்கிறேன்” என்றும் கூறினார்.
அப்படி அஷ்டாவக்கிர முனிகள் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

அந்த தேஜோமயமான முனிவரைக் கண்டதும் ராஜன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு,,”சுவாமி தாங்கள் இங்கு எழுந்தருளியதற்கான காரணம் யாதோ? என்னால் ஆகவேண்டிய காரியம் ஏதேனும் இருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்க வேண்டும்” என்று வினயமாக கேட்டுக்கோண்டான்.
முனிவருக்கு ராஜனின் பணிவைக் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டாலும்,அதை காண்பித்துக் கொள்ளாமல், “எந்த அபராதத்திற்காக பண்டிதர்களையெல்லாம் சிறையிலிட்டுள்ளாய்? அதை முதலில் கூறு . பிறகு என்னைப் பற்றி விசாரிக்கலாம்” என்றார்.
ராஜனும் நடந்ததை எல்லாம் கூறி தன் சந்தேகத்தையும் கூறினான்

“ஒரு சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்கவில்லை யென்பதற்காக அதை கற்பனையென்றோ பொய் என்றோ.கூறலாமா? நான் அதை அக்ஷரம் பிரதி சரியென்று உறுதி கூறுகிறேன்,” என்றார் முனிவர்.
ராஜன் அவரிட்மும் ,” அப்படியென்றால் நான் குதிரையை வரவழைக்கிறேன்; தாங்கள் நிரூபித்து காண்பித்து என்னை அனுக்கிரகிக்க வேண்டும்,” என்றான்.
“சந்தோஷம். உன் எண்ணம் உத்தமமானது தான்.ஆனால் அதை தெரிந்து கொள்வதற்கு நீ என் சீடனாக வேண்டும். சீடனாவதற்கு நீ தகுதியானவன் தானா என்று நான் சோதித்து அறிந்து கொள்ளவேண்டும். முதலில் குருவின் வார்த்தையில் நம்பிக்கை வேண்டும். என் மீது நம்பிக்கை இருந்தால் பண்டிதர்களை யெல்லாம் சிறையிலிருந்து விடுவித்து விட்டு என்னுடன் காட்டிற்கு வா. உன் தகுதியை சோதித்து பிறகு உபதேசம் செய்கிறேன்,” என்றார் முனிவர்.
ஜனகருக்கும் முனிவரின் மீது அதீதமான பக்தியேற்பட்டு பண்டிதர்களையெல்லாம் சிறையிலிருந்து விடுவித்து விட்டு ஒரு குதிரையில் ஏறி பரிவாரங்கள் சகிதம் முனிவரை பின் தொடர்ந்தான்.
கோட்டைக்கு வெளியே ஒரு ஆலமரத்தடியில்,முனிவர் பல்லக்கிலிருந்து இறங்கி ,அரசனையும் குதுரையிலிருந்து கீழே இறங்கச் சொன்னார்.

“ இந்த பரிவாரங்களெல்லாம் உபதேசதிற்கு தேவையில்லையே? அவர்களை அனுப்பிவிடு ,” என்று முனிவர் கூற அரசனும் அங்கனமே செய்தான்.
பிறகு முனிவரின் அனுமதியுடன் அரசன் குதிரையின் அங்கவடியில் ஒரு காலை வத்து ஏறி இரண்டாவது காலை உயர்த்த முயன்ற பொழுது, “ இரண்டாவது காலை அங்கவடியில் வைப்பதற்கு முன் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்.” என்றார் முனிவர்.

“அப்படியே ஆகட்டும் “ என்றான் அரசன்.

“சாஸ்திரத்தில் ஞானம் பெறுவதற்கு குரு வேண்டுமென்று கூறியிருக்கிறதா ? இல்லையா?”

‘இருக்கிறது முனிவரே”

“அப்படியென்றால் எனக்கு குரு தக்ஷிணை கொடுத்து குருவாக எற்றுக்கொண்டால் தான் நான் உனக்கு உபதேசம் செய்ய முடியும்” என்றார் முனிவர்.

அரசனும் தயங்காமல்,” இந்த க்ஷணமே என் உடல், உள்ளம்,பொருள் எல்லாவற்றையும் தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருவே,” என்று ஜனகன் வேண்டினான்.
“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு முனிவர் பக்கத்திலிருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டார்..
ராஜா குதிரையின் அங்கவடியில் ஒரு கால் வைத்த நிலையிலும் மறு கால் பூமியிலிருந்து எடுக்கும் நிலையிலும் அப்படியே நகராமல் நின்றார்.

பகல் சென்று இரவு வந்தது. அரசன் அசையவில்லை.
அரசன் திரும்பி வரவில்லையே என்று மந்திரி பிரதானிகளும் ஏனையோரும் கவலையடைந்து காட்டிற்கு வந்து பார்த்தார்கள்.

ராஜன் அசையாமல் சிலை போல் அங்கவடியில் ஒரு காலும் பூமியில் ஒரு காலுமக நின்று கொண்டிருந்தார். முனிவரை எங்கு தேடியும் காணோம்

 மந்திரி பிரதானிகள் ராஜனிடம் “வாருங்கள் அரண்மனைக்குப் போகலாம்”, என்றார்கள். அரசன் அசையவும் இல்லை ; பதில் எதும் கூறவுமில்லை.

 இரவு ஏறிக்கொண்டே போயிற்று

மிகுந்த நேரத்திற்குப் பின் மந்திரி பிரதானிகள் ராஜாவை அப்படியே பல்லக்கில் தூக்கி வைத்து அரண்மனைக்கு கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

அரசன் சலனமில்லாமல் கட்டிலில் படுக்க வைத்த நிலையிலேயெ படுத்து கிடந்தார்.

பேசவில்லை என்றுமட்டுமில்லாமல் ஆகாரமோ ஜலமோ கொடுத்தாலும் விழுங்கவுமில்லை.

ராணி மற்றும் அரசவை பிரதானிகள் எல்லாருக்கும் மிகவும் கவலையாகிவிட்டது.

எல்லோருக்கும் ஒன்றுமட்டும் புரிந்தது, ‘அஷ்டவக்கிர முனிவர் வந்தால் தான் நிலைமை மாறும்’

மறு நாள் சூரியாஸ்தமனத்திற்குப் பின் சேவகர்கள் எங்கெல்லாமோ தேடி அலைந்து அஷ்டாவக்கிரரை கண்டு பிடித்து பல்லக்கிலேற்றி கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

அவரிடம் மந்திரி பிரதானிகள் நிலைமையை விளக்கிக் கூறினார்கள்.

முனிவர் ராஜன் அருகில்ச் சென்று ,” ராஜன்!” என்று அழைத்தார்.

“என்ன சுவாமி ஆக்ஞை?” என்று பதில் கொடுத்தார் ஜனகர்.

எல்லோருக்கும் ஆச்சரியமாகிவிட்டது. தாங்கள் எவ்வளவு கேட்டும் பதில் கூறாத அரசர் முனிவரின் முதல் கேள்விக்கே பதில் கூறியது வியப்பாக இருந்தது.

“நீ எழுந்து ஆகாரம் எடுத்துக்கொள்,” என்றார் முனிவர்.

அரசர் எழுந்து ஆகாரம் உட்கொண்டுவிட்டு மறுபடியும் எந்த அசைவும் இல்லாமல் உட்கார்ந்து விட்டார்..

“தயவு செய்து எங்கள் பிரபுவைப் பழைய நிலைக்கு வரச் செய்யுங்கள்,” என்று மந்திரி கேட்டுக் கொண்டார்.

முனிவர் ‘சரி ‘ என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பிறகு ராஜனிடம் வந்து

“ராஜன் ஏனிப்படி நிச்சலனமாக உட்கார்ந்திருக்கிறாய்?”என்றார்.

அதற்கு ஜனகர் “சுவாமி,இந்த சரீரத்தின் மீது எனக்கு எந்த விதமான சொந்தமும் கிடையாது. இந்த கைகள்,கால்கள்,நாக்கு காது, கண்கள் முதலிய சர்வேந்திரியங்களும் எனதில்லை.இந்த ராஜ்ஜியம் எனதில்லை.உண்மையாகவே என் உடல் ,பொருள்,உள்ளம், அனைத்தையும் உங்கள் பாதங்களில் அர்ப்பித்து விட்டேன்.ஆகையால் உங்கள் அனுமதி இல்லாமல் எவ்விதமான செயலுக்கும் நான் உரிமை இல்லாதவன்.அதனால்தான் இப்படியிருக்கிறேன்.” என்றார்.

 அஷ்டவக்கிரர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நீ ஞானோபதேசத்திற்கு சர்வ தகுதியையும் பெற்றுவிட்டாய்.நீ இப்பொழுது பிரம்ம சொரூபம். நீ முக்தனாகிவிட்டாய்.அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபமே நீ,” என்று ஆசீர்வதித்தார்.

ஜனகரோ ‘எப்படி நான் ஒரு நாளில் இப்படி பிரம்ம சொரூபமானேன்? பேத உண்ர்ச்சியும்,மனோ விகாரமும் போகாத அஞ்ஞானியன்றோ நான்,” என்று மனதுக்குள்ளேயே தர்க்கித்துக் கொண்டு,முனிவரை நமஸ்கரித்து கேட்டுக்கொண்டார்,

கதம் ஞானமவப்னோதி கதம் முக்திர் பவிஷ்யதி

வைராக்யஞச கதம் ப்ராப்தம் ஏதத் ப்ருஹி மம ப்ரபோ?
இந்த கேள்வியுடன் ஆரம்பித்த ஜனக-அஷ்டாவக்கிர சம்வாதம் இரவு முழுவதும் நீண்டு நின்றது.

காலையில் கதவை திறந்து கொண்டு வந்த மன்னரையும் முனிவரையும் பார்த்து எல்லோரும் வியந்தார்கள்.

அப்பொழுது, முனிவர் “ராஜன் இன்னும் உனக்கு சந்தேகம் ஏதாவது இருக்கிறதா?ஒருகாலை குதிரையின் அங்கவடியில் வைத்து அடுத்த காலை வைப்பதற்கு முன் பிரம்ம ஞானம் பெறமுடியுமா?” சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஜனகர் சொன்னார்,”இப்பொழுது எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.எல்லா சாஸ்த்திர வாக்கியங்களும் உண்மை தான்.”.

குருவென்பவர் பிரம்ம ஞானி. அவர் பரமாத்மாவே. அவரிடம் பூரணமாக சரணடைந்து விட்டால் நாம் ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்து விடுவோம் என்பதை விளக்குகிறது மேற்கூறிய கதை.

வைஷ்ணவத்திலுள்ள பூரண சரணாகதி தத்துவமும் இதையே தான் அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது. பூரண சரணாகதி அடைந்து விட்டால் பிறகு நமக்கு என்று ஒன்றும் கிடையாது. அங்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிடுகிறது. நமது விஷய வாசனைகள் எல்லாம் அற்றுப் போய்விடும்.

.

Posted by RHS 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s