ரமணஜோதி 73

Spiritual
Monday, 23 February 2015
ரமணஜோதி 73
ரமணஜோதி 73
எது ஞானம்?
          நூலறி வறியாப் பேதைய னென்றன்

         மாலறி வறுதரு ளருணாசலா
‘நூல்கள் வழியாக கற்று அறிந்துகொள்ளும் அறிவே அறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பேதை நான். இந்த பேதையின் ‘மாலறிவை’ அறுத்து எனக்கு முக்தியளிப்பாய் அருணாசலா” என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.

வேதங்களும் சுருதி ஸ்மிரிதிகளும் பிரம்மனைக் குறித்த உண்மையை தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. வேத-வேதாந்தங்களைக் கற்றதினால் மட்டுமே ஒருவன் ஞானியாகி விடமாட்டான்; அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியுமில்லை.

இதன் மூலம் பகவான் வேத வேதாந்தங்களின் உபயோகத்தை நிராகரிக்கிறார் என்றர்த்தமில்லை.அது மட்டும் போதாது என்கிறார்.

பரமன் அருள் இருந்தால் மட்டும் தான் நாம் பரமனை அணுக முடியும்; பரமனுடன் இரண்டற கலந்திட முடியும். அதற்கு விஷய வாசனைகள் அற்றுப் போகவேண்டும் ;வைராக்கியம் வரவேண்டும்.அவித்யை அழிய வேண்டும்.

மாலறிவு அல்லது அவித்யா அழியவேண்டுமென்றால் பரமன் அருள் வேண்டும் .அதை வேண்டுகிறார் பகவான் இந்த செய்யுளில்.
ஞானத்தைப் பற்றியும் மாலறிவைப்பற்றியும் அஷ்டாவக்கிர சம்ஹிதையில் ஜனகர் மிகவும் விரிவாக கூறுவார்.அதைச் சற்றே பார்ப்போம்.
  “ஆச்சரியம்! ஆச்சரியம்! ‘அப்பழுக்கில்லாததும்,சாந்தியின் சொரூபவுமான இந்த உலக நியதிகளுக்கெல்லாம் மேலானதுமான அறிவே நான் என்கின்ற உண்மை’ தெரியாமல் எவ்வளவு பெரிய அறிவிலியாக இருந்திருக்கிறேண் ?” என்று ஜனகனின் ஒப்புதல் வாக்குமூலத்துடன் ஆரம்பிக்கறது அஷ்டாவக்கிர சம்ஹிதையின் இரண்டாம் அத்தியாயம். ஜனகர் மிகவும் பெரிய அறிவாளி. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த மாஹா ஞானியான ராஜரிஷி..அவருக்கே இப்படி அங்காலாய்க்கின்ற ஒரு நிலைமை ஆன்மாவைப்பற்றின உண்மை ஞானம் உதயாமாகும் போது உண்டாகிறது.
          அஹோ நிரஞ்சன: சாந்தோ

          போதோ அஹம் ப்ரக்ருதே: பர:

          ஏதாவந்தமஹம் காலம்

          மோஹேனைவ விடம்பித: !

                   சுலோ 2 அத்.2 அஷ்.கீ
எனக்கும் இந்த உடலுக்கும் என்ன தொடர்பு? இந்த தேஹத்தை பிராகாசிப்பிப்பது

 ‘ நான் ‘ தான் என்பது தான் ஒரே உறவு. அதே போல் இந்த உலகில் நாம் காணுகின்ற சகல பொருள்களையும் –இந்த ஜகத்தை முழுவதும்- காண்பிப்பதும் ‘ நான் ‘தான் என்பது உண்மை.

ஆனால் அப்படி நாம் காணும் இந்த ஜகத்தை நம் இந்திரியங்கள் மூலம் நமக்கு காட்டும் பொழுது ‘நான் ‘ என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? ‘நான் ‘ எப்படி பாதிக்கப் படுகிறேன் என்று கேட்டால் ஒன்றும் செய்வதும் இல்லை;ஒருவிதத்திலும் பாதிக்கப்படுவதுமில்லை.’என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

 நான் ‘ வெறும் சாக்ஷி மாத்திரமாய் நின்று கொண்டிருக்கிறேன். ‘நான்’ காணும் இந்த ஜகத்—உலகம்—தேஹம் உட்பட எல்லாமே என்னுடையது தான். ஏனென்றால் அவையெல்லாம் என்னால் தோற்றுவிக்கப் படுகின்றவை.

இன்னொரு விதத்தில் பார்த்தால் இந்த உலகமும் என்னுடையதில்லை; தேஹமும் என்னுடையதில்லை. ஏனென்றால் நானே இல்லை.எல்லாயிடத்திலும் பிரமனே இருக்கிறான்.

அப்படியானால் இந்த உலகம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன? என்னுடைய தேஹம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் எல்லாமே பிரம்மம்..

ஒரு சிறு உதாரணம் பார்ப்போம்

நாம் மனித வர்க்கத்தில் பிறந்துள்ளோம். ஆகவே இந்த உலகிலுள்ள மனிதர்களெல்லாம் என்னுடையவர்கள் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு உண்மை.

ஆனால் எப்பொழுது மற்ற நாடுகளில் வசிக்கின்ற மனிதர்கள் என்னுடைய நாட்டில் வசிப்பவர்களுக்கு எதிராக திரும்புகிறார்களோ அப்பொழுது மற்ற நாட்டினர் என்னுடையவர்கள் அல்லாமலாகிவிடுகிறார்கள். அப்பொழுது அவர்களது நாசம் எனக்கு வருத்தத்தை அளிப்பதில்லை; மாறாக சந்தோஷத்தை அளிக்கிறது.

என்று எனது நாட்டினர் எனது பிராந்தியத்திற்கு இடைஞ்சலாகிறார்களோ அப்பொழுது நேற்று வரை எனது நாட்டினர் என்று உரிமை பாராட்டி வந்தவர்கள் விரோதிகள் ஆகிறார்கள். பல வருடங்களுக்கு முன் மும்பையில் வாழ்ந்து கொண்டிருந்த தென்னிந்தியர்கள் மும்பைவாசிகள் சிலரால் அன்னியர்களாக கருதப்பட்டார்கள்; இன்று பீஹார் மானிலத்தவர் மும்பையில் அன்னியர்களாக கருதப்படுகிறார்கள். .ஏன் ,தமிழகத்திலேயே,இங்கேயே பிறந்து ,தமிழ் பேசி, தமிழை வளர்த்து வந்த பிராமாணர்கள் அன்னியர்களக கருத்ப்பட்டார்கள்.

குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினர் எனது மனைவி-மக்களுக்கு விரோதமாக செயல்படும் பொழுது எனது வட்டத்தை பின்னும் குறுக்கி நான்-என் மக்கள் என்று சுருங்கிப்போகிறோம். மனைவி மக்கள் நாம் சொன்னதை கேட்காத போது நம் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் பொழுது நான் என்னிலேயே சுருங்கி விடுகிறேன்.

எனது காலோ கையோ ஒத்துழைக்காத போது அந்த அங்கங்களை வெட்டி எறியவும் தயங்க மாட்டேன்.

இந்த தேஹத்தை இனிமேல் சரி பண்ண முடியாது என்ற ஒரு நிலை வரும் பொழுது இந்த தேகத்தை உதறித் தள்ளிவிட்டு வேறு தேகம் தேடி தயங்காமல் சென்று விடுகிறேன். இதிலிருந்து எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நான் என்பது இந்த தேஹமல்ல்; ‘அது’ தனி. தேஹத்தோடு ஒருமைப் படும்போது பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம்

இது தான் எனக்கும் தேகத்திற்கும்,இந்த உலகிற்கும் உள்ள பந்தம்

இப்படிப்பட்ட பந்தத்தை ‘நான்; அறுத்து எறிந்து விட்டு விமுக்தனாக முடிந்தால் .மற்றவர்களிடம் இந்த தேகம் உட்பட உலகிலுள்ள எல்லா வஸ்துக்களிடமுள்ள விருப்பு வெறுப்புக்கள் அற்றுப் போய்விடும்.

ஆனால் இந்த அறிவைப் பெறுவதற்கு அருணாசலனின் அருள் வேண்டும்.

இந்த அறிவே உண்மையான அறிவு.

இதையே தான் உபனிஷத்துக்கள் ப்ரம்ம ஞானம் என்கிறது.

          சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம:

என்று கூறப்பட்டு நாம் கேட்டுள்ளோம்.

இந்த பிரம்ம ஞானம் பெறுவதற்கு பரமனின் அருள் வேண்டும் என்பதை கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதையில் விளக்கமாக கூறியுள்ளார்.

பத்தாம் அத்தியாயம் எட்டாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:

          அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: சர்வம் ப்ரவர்ததே !

          இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: !!

‘நானே அனைத்திற்கும் பிறப்பிடம்;இந்த ஜகத்திலுள்ள சர்வமும் என்னிடமிருந்தே விரிவடைகின்றன. இதை உணர்ந்தவர்கள் என்னை விட்டு வழுவாமல் கர்மங்களை அனுஷ்டிக்கிறார்கள்.’

இப்படி பகவானை சரணடைந்து அவனுக்கு பிரியமான கர்மங்களை அனுஷ்டிப்பவர்களை,அப்படியொரு யோக நிலைக்கு மாறுவதற்கு மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் ஞானிகளை, பரமன் மேலும் மேலும் வலுவளித்து புத்தியோகத்தை அளித்து இந்த உலகம் முழுவதும் அந்த பிரம்மனே என்கின்ற அறிவை பெற உதவுகிறான். அதன் மூலம் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைய செய்கிறான்.
தேஷாம் ஸததயுக்தானாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் !

ததாமி புத்தியோகம் தம் யேன மாமுபாந்தி தே !!

ப.கீ அத் 10 சுலோ 10.
ஆன்மபோதம் தெளிந்தவர்கள் விழிப்புடையவர்களாகிறார்கள். அவர்களுக்குப் புரியும்,

” நானே எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மா;நானே அவைகளின் ஆதியும் நடுவும் அந்தமுமாயிருக்கிறேன்.” 
ஆகவே எல்லோரும் யக்ஞ சங்கல்ப்பத்திலிருந்து வழுவாத முறையில் எந்தவொரு சிருஷ்டிக்கும் தீங்கு விளையாத வகையில்,நன்மை பயக்கும் வகையில் கர்மங்கள் அனுஷ்டிக்க வேண்டும். அப்படி செய்ய்யும் பொழுது நாம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களாகிறோம். ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றவர்களாகிறோம்.
          அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாசயஸ்தித: !

          அஹமாதிஸ்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச !!

                   ப.கீ அத்10 சுலோ 20
சுருக்கமாக சொல்லப்போனால் பரமனின் அரூள் இருந்தால் நாம் விழிப்புறுகிறோம்; சத்தியமான ஞானம் பெறுகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s