Ashtavakramanikal 7

Friday, 1 January 2016

அஷ்டாவக்கிரமணிகள் 7

மணி இரண்டு 

ஓசை ஒன்று

ஜனகரின்  மூன்று கேள்விகள்.

              कथम् ऩानमवप्नोति कथम् मुक्थिर्भविश्यति !

          वैराग्यम् च कथम् प्राप्तम् एतद् ब्रूहि मम प्रभो !

கத²ம் னானமவப்னோதி கத²ம் முக்தி²ர்ப⁴விஶ்யதி !

வைராக்³யம் ச கத²ம் ப்ராப்தம் ஏதத்³ ப்³ரூஹி மம ப்ரபோ⁴ !

         புராதன பண்பாட்டின் படி சீடன் குருவை அணுகி தனக்கு தெரிய வேண்டியதை கேட்க வேண்டும்; அதற்கு பின் தான் குரு அவனுக்கு கல்வியறிவை புகட்ட ஆரம்பிப்பார்.

’தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற அவா சீடன் மனதில் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் கல்வியின் பயனை அவன் அடைய முடியும்.

இன்றைய கல்வி முறையில், ஓட்டல்களில் காணப்படும் பலகாரப் பட்டியல் போன்ற ‘சிலபஸ்’ எனப்படும் விஷயங்களின் பட்டியலை மாணவர்களின் தலையில் கட்டி வைக்கிறார்கள்;அவர்களும் பெற்றோர்களின் வறுப்புறுத்தலுக்கும், உலக நடைமுறையிலிருந்து வேறுப்பட்டு சஞ்சரிப்பதிலுள்ள அபாய பயத்தினாலும் தனக்கு பிடித்ததோ பிடிக்காததோ, கல்விக்கு(கூ)டங்களில்-குடத்திலிருந்து  நீரை கொட்டுவது போன்று  அவர்களின் செவிப்பறையில் சொரிகிறார்க்ள். வருடாந்திர தேர்வுகளில் அவர்கள் செவிகளின் மூலம் உட்கொண்டவைகளை வெளியேற்றிவிட்டு நிம்மதியாக தன் வழியை தேடி செல்கிறார்கள். ஆகவே நாம் மருத்துவம் படித்தவர்கள் ஆட்சியாளர்களாகவும், விஞ்ஞானம் படித்தவர்கள் கணக்கர்களாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியறிவிற்கு சம்பந்தமில்லாத தொழிலில் ஈடுபடுவதை காண்கிறோம்;அதன் விளைவுகளை அனுபவிகிறோம்.

ஜனகர் காலத்தில் அப்படியில்லை; மாணாக்கன் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் தனக்கு தெரிய வேண்டியதை குருவினிடம் பணிவுடன் கேட்கின்ற கலாச்சாரம் நிலவிலிருந்தது.

அவன் கேட்கின்ற கேள்விகள் மூலம் தனது அறிவு நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதையும், தெரிந்துகொள்ள உள்ள ஆர்வத்தையும் கேட்கின்ற முறையில் தனது பணிவையும் வெளிப்படுத்துகிறான்.

ஜனகர் சர்வ ஐஸ்வரியங்களும் பெற்றவராயிருந்தும், சர்வ அதிகாரங்கள் படைத்த சக்கரவர்த்தியாக இருந்தும் தனது சந்தேகங்களை மிகவும் பணிவுடன் கேட்கிறார்.

” ப்ரூஹி மம பிரபோ” என்ற சொற்றொடர் அவரது பணிவை காண்பிக்கிறது.

“ப்ரூஹி” சொல்லாலும் என்னுடைய பிரபோ என்கிறார். 

அந்த ‘பிரபோ’ எனும் சொல் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. பிரபு என்றால் ‘பிரபைக்குடையவன்,ஒளிபடைத்தவன், எல்லாவித ஐசுவரியங்களுக்கும் உடையவன், அறிவின் பொக்கிஷம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். மாணாக்கன் குருவை அணுகும்பொழுது குரு தன் அறிவுக்கண்களை திறக்கும் வல்லமை படைத்தவர் என்ற நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்பது நமது மரபு.

மாதா, பிதா, குரு எல்லோரும் தெய்வத்திற்கு சமானமானவர்கள்; ஏனென்றால் மூவரும் நம்முடைய அறிவுக்கண்களை திறக்க உதவுகிறார்கள்.மாதா சிசு தனது கர்ப்பத்திலுள்ள பொழுதே நல்ல எண்ணங்களை உள்ளத்திலே கொண்டும்  நல்லவைகளை கண்களால் கண்டும், நல்லவைகளையே காதுகளால் கேட்டும், நல்ல உணவுகளை உண்டும், நல்ல கருமங்களையே செய்தும் சிசுபவிற்கு நல்லறிவை புகட்டுகிறாள். அப்படிச் செய்ய தவறினால் பிறக்கின்ற சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. 

மாதாவிற்கு அடுத்த படியாக தந்தை,தன் குழந்தைக்கு நடக்கவும் பேசவும், உலக அறிவை புகட்டியும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார். 

குருவாகப்பட்டவர் இந்த இருவரின் மொத்த உருவமாக மட்டுமல்லாமல் ஞானத்தையும் கொடுக்கிறார்.ஆகவே குரு சிஷ்ய பந்தம்- அன்யோன்யம்- விவரிக்க இயலாத ஒன்று.

இன்றைய கல்வி முறையில் தாய் தந்தையிரின் கடைமை கல்விக்கூடங்களுக்கு கட்டணம் கட்டுவதோடு முடிந்து விடுகிறது. மாணவர்களுக்கோ தன் பெற்றோர் கட்டணம் கட்டிவிட்டார்கள்; குருவின் கடன் கற்பிப்பது.அதைக் கடந்த ஒரு மரியாதை கலந்த அன்யோன்ய பந்தம் ஏற்படுவதில்லை. 

கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் கல்விக்கூடங்கள் கொடுக்கின்றன. அவர்களது விசுவாசம் கல்விக்கூடங்களிடம் தானே தவிர மாணவர்களின் நலனில்லை.

ஜனக-அஷ்டாவக்கிர பந்தம் எந்த விதமான வக்கிரமும் இல்லாமல் உண்மையான குரு சிஷ்ய பந்தமாக இருந்தது.

ஜனகர் மூன்று கேள்விகள் கேட்கின்றார்: 

ஞானம் எப்பொழுது உண்டாகிறது? 

விமோசனம்-முக்தி-எப்பொழுது சம்பவிக்கின்றது? 

வைராக்யம் எப்பொழுது உண்டாகிறது?

அவரது கேள்விகள் அவர் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர் என்பதை நிதரிசனமாக்கிறது.அம்மாதிரி அறிவுப்பசியுள்ளவர்களுக்குத் தான் கல்வி புகட்டலாம் என்பது நமது கலாச்சாரத்தின் இன்னொரு மாண்பு.

மாணாக்கன், ‘ஜிக்ஞாஸு” ஆக இருக்கவேண்டும்.

ஞானம், முக்தி, வைராக்யம் மூன்று சொற்களையும் ஒரே மூச்சில் சொன்னது மூலம் இவைகளுக்குள் ஏதோ தொடர்புள்ளது தனக்குத் தெரியும் என்பதை வெளிப்படுத்துகிறார் ஜனகர் .

முதலில் ஞானம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஜனகர் வேத வேதாந்தங்களில் நிறைய கற்றுத் தேர்ந்தவர். அப்படிப்பட்டவர் அந்த நூல்களில் காணாத-கிடைக்காத ஞானத்தை தேடி அஷ்டாவக்கிரரிடம் வந்து சேருகிறார். கேள்விகளை தொடுக்கிறார். அப்படியென்றால் இந்த நூல்களிலெல்லாம் ஞானம் இல்லையா? வேத வேதாந்தங்களில் பிறகு என்ன தான் உள்ளது? 

இந்த நூல்களிலெல்லாம் ஞானத்தை அடைவதற்கான வழி முறைகள் தான்.இல்லை,இல்லை; வழிமுறைகளைக்  குறித்துள்ள தகவல்கள் தான். அவைகளெல்லாம் தகவல் களஞ்சியம் தான்.ஆனால் அந்த தகவல்கள் ஞானத்தை ஒருவருக்கும் பெற்றுத் தருவதில்லை.

ஏனென்றால் ஞானம் பெறப்படுகின்ற பொருளல்ல; அது ஒரு நிலை; வார்த்தைகளில் விளக்க முடியாத ஒரு குண விசேஷம்.அதை எப்படி விளங்க வைப்பது?

ஸ்வாமி சின்மயானந்தா அஷ்டாவக்கிர கீதைக்கான தனது விளக்கவுரையில் கூறுகிறார்:

“இருட்டில் விளக்கு கம்பத்தை பேய் என்று மிரளுகிறான் ஒருவன்.அவனது முன் அனுபவம், மற்றும் தன்னை சூழ்ந்துள்ள இருள்,அவனுக்கு அப்படி ஒரு மயக்கத்தை உண்டு பண்ணுகின்றன.அது வெறும் விளக்கு கம்பம் தான் என்ற அறிவின்மை,பேய் எனும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது.அது அவனுள் பயத்தை உளவாக்குகின்றது. அம்மாதிரியான பயம் அவனுக்கு துயரத்தை அளிக்கின்றது.”

தான் யார் என்ற ஆத்மபோதம் இல்லாத்தாலும்,இருள் பின்னிய மாயத் தோற்றத்தினாலும் அவனுக்கு துயரம் உண்டாகிறது.

இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் நம் முன்னோர்கள் ஞானமின்மை என்றோ அவித்யை என்றோ குறிப்பிட்டார்கள்.இம்மாதிரியான அவித்யை நீங்குவதற்கு நமக்கு ஆத்மபோதம் உண்டாக வேண்டும்.இந்த ஆத்மபோதம் உண்டாகிவிட்டால் மாயத்தோற்றங்கள் மறைந்துவிடும்.

“இத்தனுவே நானா மெனுமதியை” என்கின்ற அவித்யை நீங்கப்பெறவேண்டும்.   நாம் பிரபஞ்ச சிருஷ்டிகளை பௌதிக சரீரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திரியங்கள் வழியாக உணருகின்றவரையிலும் அவனது ஞானம் குறைபாடுடையதே.அதற்கு எல்லைகள் உண்டு.அவன் முழு சத்யத்தை அறிவதில்லை; ஆகவே மனக்குழப்பத்திற்கும் சஞ்சலத்திற்கும் ஆளாகிறான்.  விருப்பு-வெறுப்பு உடையவனாகிறான்.அவன் பந்தங்களில் சிக்கி உழலுகிறான்.

புத்திசாலி மாணாக்கன் ஞானம் என்பதை தெரிந்துகொள்வதால் மட்டும் திருப்தி அடைந்துவிட முடியாது.அப்படிப்பட்ட அறிவு வெறும் ‘ஏட்டு சுரைக்காய்; கறிக்குதவாது” அவித்யை எனும் மாய வலையிலிருந்து விடுபடவேண்டும்.அதற்கான வழிமுறையை தெரிந்துகொள்ள வேண்டும்.அதைத்தான் ஜனகர் தனது இரண்டாவது கேள்வியாக முன்வைக்கிறார்.

’பௌதிக உடலே நான்’என்ற நினைப்பிலிருந்து எவ்வாறு விடுபடமுடியும்?

 “கதம் முக்திர்பவிஷ்யதி”

அவரது மூன்றாவது கேள்வி, இரண்டாவது கேள்விக்கான பதிலை ஓரளவிற்கு குறிப்பிட்டுக் காண்பிக்கின்றது.

’ராகமின்மை”-‘விராகதை”, பற்றின்மை, ஆசையின்மை உண்டானால்த்தான் விடுதலை கிடைக்கும். ஆசையின்மை எனும் வைராக்யம் எவ்வாறு அடைவது என்று கேட்கிறார் ஜனகர்.

தன்னை பௌதீக உடலுடன் பந்தப்படுத்திக்கொண்டு தன்னைச் சுற்றி ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டித்துக்கொள்கிறோம்.

அந்த  பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளும் பூரண திருப்தியை  அளிப்பதில்லை. ஆகவே நாம் மேலும் மேலும் பொருள்களையும் பந்தங்களையும் தேடிக்கொள்கிறோம்.இப்படி

ப்பட்ட பந்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க, உண்மையான ‘நான்’ யார் என்று தெரிந்து கொள்வது கடினமாய்க் கொண்டேயிருக்கிறது. நமது இந்திரியங்கள் மூலமும், மனஸின் மூலமும் இந்த பிரபஞ்சத்தை காண்கின்ற வரை, நாம் உணர்ச்சிகளுக்கும், விருப்பு-வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கும் ஆளாகிறோம்.இந்த பந்தங்கள் நம்மை கட்டிப்போட்டுள்ளதாக உண்ருகிறோம்.ஞானம் நம்மை விட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் மிக்கவரும் இந்த பந்தனங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்புவதில்லை. ஜனகரைப் போன்ற புத்திசாலி மாணாக்கன் விடுபடவில்லை என்றால்த் தான் ஆச்சரியப் பட வேண்டும். ஆகவே அவர் தனது இரண்டாவது கேள்விக்கணையைத் தொடுக்கிறார்.

அப்படிப்பட்ட விடுதலை- பந்தங்களின் முறிவு- உலகப் பொருள்களுடன் பற்றுள்ளவரை நமக்கு கிடைக்காது. 

‘பற்றின்மை’ என்றால் உலகத்திலுள்ள பொருள்களையெல்லாம் பிறருக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்கு ஓடிவிட வேண்டுமென்பதல்ல.அது நடக்கவும் நடக்காது. காட்டிலும் ‘பற்றுதல்’ ஏற்படக்கூடும். அங்கும் நிழல் தேவைப் படும்; சூட்டிலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்பு தேவைப் படும்,மழைக்காலத்திற்கென உணவுப் பொருள்களை சேகரிக்கத்தோன்றும்.ஆகவே  இருக்குமிடத்திலேயே இருந்து கொண்டு பௌதீகப் பொருள்களின் மீது பற்று வைக்காமலிருப்பது தான் முக்திக்கு சரியான வழி.அதற்கு வைராக்கியம் வளர வேண்டும். இவ்வளவும் ஜனகருக்கு புரிந்ததால் மூன்றாவது கேள்வியெழுகிறது. “வைராக்யம் ச கதம் ப்ராப்தம்”

Posted by RHS at 01:52 

.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s