Yogavasishtam @ Maharamayanam 623
தினமொரு சுலோகம்
நாள் 623
பாஸ மன்னனின் அனுபவங்கள்.
ப³ஹு த்³ருʼஷ்டம்ʼ மாயா த்³ருʼஶ்யம்ʼ ப³ஹு ப்⁴ராந்தமகே²தி³னா
வஹ்வேவ ப³ஹுதா³ நூனமனுபூ⁴தம்ʼ ஸ்மராம்யாஹம்ʼ (6.2/131/30)
बहु दृष्टं माया दृश्यं बहु भ्रान्तमखेदिना
वह्वेव बहुदा नूनमनुभूतं स्मराम्याहं (6.2/131/30)
bahu dri’sht’am maayaa dri’shyam bahu bhraantamakhedinaa
vahveva bahudaa noonamanubhootam smaraamyaaham (6.2/131/30
பாஸன் சொன்னார்:” நான் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன்.பலவற்றையும் கண்டேன்,அனுபவித்தேன்.இருந்தும் எனக்கு அசதி தோன்றவேயில்லை.நான் பல விஷயங்களையும் பலவிதங்களில் அனுபவித்தேன். இதையும் நான் நினைவு கூறுகிறேன்.
வெவ்வேறு உடல்களில் குடியேறிய எனக்கு நீண்ட காலம் எண்ணிக்கையற்ற சுக- துக்க அனுபவங்கள் ஏற்பட்டன.
பலவிதமான ஆசைகளாலும் சாபங்களாலும் நான் வெவ்வேறு உடல்களை ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது.எண்ணிக்கையிலடங்காத பொருட்களும் காட்சிகளும் நான் கண்டேன் ; அனுபவித்தேன்.எல்லாவற்றையும் காண வேண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இருந்து கொண்டேயிருந்தது.அக்னி பகவான் அம்மாதிரியான ஒரு வரத்தை ஏற்கனவே எனக்குத் தந்திருந்தார்.
விசுவத்தைக்குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது வாசனைகளாக இருந்தது.ஆகவே, நான் பலவிதமான உடல்களை ஏற்றுக்கொண்ட பொழுதும் எனது ஆரம்ப இலட்சியத்தை மறக்கவில்லை..ஏறக்குறைய ஓராயிரம் வருடங்கள் மரமாக வாழ்ந்தேன்.அப்பொழுது என் ஆசைகள் என்னிலேயே மையம் கொண்டிருந்ததால் நான் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க வேண்டிவந்தது.மனோ விருத்தி எதுவுமே இல்லாமல் நான் பூக்களையும் காய்களையும் உற்பத்தி செய்து கொண்டிருந்தேன்.
பிறகு ஒரு நூறு வருடங்கள் மேரு மலையுச்சியில் தங்க நிறமுள்ள மானாக மேய்ந்து கொண்டிருந்தேன்.புல் மேய்ந்து கொண்டிருந்த எனக்கு சங்கீதத்தில் விருப்பம் இருந்தது.மிகவும் சிறிய பிராணியாக இருந்த நான் யாருக்கும் எந்த விதமான பாதகமும் செய்யாதவனாக இருந்தேன்.
ஐம்பது ஆண்டு காலம் நான் ஒரு வன் மிருகமாயிருந்தேன். அப்பொழுது எனக்கு எட்டு கால்கள் இருந்தன. நான் சிங்கத்தை விட அதிக பலமுள்ளவனாக இருந்தேன்.பிறகு நான் ஒரு படிப்பாளியாக இருந்தேன்.அதன் பின் ஒரு அன்னமாக பிறந்தேன்.அந்த உருவில் ஆயிரத்து ஐந்நூறு வருடம் வாழ்ந்தேன்.பிரம்மாவின் வாகனமான ஹம்ஸத்தின் மகனாயிருந்தேன் நான்.பிறகு ஒரு நூறு வருட காலம் பகவான் நாராயணனின் பக்தர்கள் பாடும் திவ்ய சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தேன்..பிறகு ஒரு குள்ள நரியாக காட்டில் வசித்தேன்.அந்த காட்டில் மதம் பிடித்த ஒரு யானையின் முன்னால் அகப்பட்டு இறப்பின் படிகளையும் மிதித்தேன். அந்தக் கணத்தில் அந்த யானையை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றதால் பிழைத்துக் கொண்டேன்.அதன் பின் நான் ஒரு அப்ஸரஸாக பிறந்தேன்.வேறு ஒரு உலகில் தனியனாக வாழ வேண்டி வந்தது ஒரு முனிவரின் சாபத்தால்த்தான்.
அதன் பின் ஒரு நூறு வருடகாலம் ஒரு வால்மீகப் பறவையாக வாழ்ந்தேன்.என் கூடும் அந்த கூடிருந்த மரமும் நசித்துப் போனவுடன் என் துணைவனும் என்னை விட்டுப் பிரிந்து போனான்
பிறகு நீண்ட காலம் தொலைவில் ஒரிடத்தில் தனியனாக வாழ்ந்தேன்.பிறகு தவத்தில் ஈடுபட்டு சன்னியாசியாக வாழ்ந்தேன்.அந்த காலத்தில் ஆசையின்மையை பயின்று வந்தேன்.அப்பொழுது நிறைய விஷயங்கள் புரியலாயிற்று.நீர்மட்டுமுள்ள ஒரு உலகைக் கண்டேன்.
வேறு ஒரிடத்தில் ஒரு பெண்மணியின் உடலில், கண்ணாடியலென்பது போல் மூன்று உலகங்களும் பிரதிபலித்துக் கண்டேன்.அவளிடம் ‘ யார்நீ’ என்று கேட்டதற்கு, அவள் ‘ நான் தான் தூய அவபோதம்’ என்றாள்.அவள் கூறினாள்,” இந்த உலகங்கள் எல்லாம் என அவயவங்கள்! தங்களில் ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது போல் எல்லாப் பொருட்களும் ஆச்சரியம் தான்! எல்லாவற்றையும் இதே மாதிரி ஆச்சரியத்தோடு பார்க்கும் வரை தங்களால் ஒன்றின் உண்மை நிலைமையையும் அறிந்து கொள்ள முடியாது.உலகங்கள் ஒருவனின் அவயவங்களே! கனவில் கேட்கும் ஒலிகள்போல் நான் எல்லாருடைய குரல்களையும் கேட்கிறேன்.”
எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்கள் அவளில்லாமல் உற்பத்தியாகி, அவளிலேயே லயித்து விடுகின்றன.வேறு ஓரிடத்தில் நான் ஒரு விசித்திரமான மேகத்தைக் கண்டேன்.அதில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்ற அம்புகள் உளவாக்கின அதி பயங்கரமான ஓசையை கேட்டேன்.அந்த மேகம் பொழிந்தது ஆயுத மழையாக இருந்தது.
வேறு ஒரு உலகம் இருளடைந்ததாக இருந்தது.அந்த உலகிலிருந்து கிராமங்கள் வேறு ஒரு உலகை நோக்கி பறந்து போய்க் கொண்டிருந்தன.தங்களின் கிராமத்தை வேறு ஒரு உலகில் கண்டேன்.
மேலும் வேறு ஒரு உலகில் எல்லா உயிரினங்களும் ஒரே போல் இருந்தன. வேறு ஒரு உலகில் சூரிய சந்திரரர்களோ நட்சந்திரங்களோ இல்லாமலிருந்தது.ஆனால் அங்கு இருளும் இல்லாமலிருந்தது.அங்கிருந்த உயிரினங்கள் சுயமாகவே ஒளி வீசிக்கொண்டிருந்தன.அவர்கள் தான் அந்த உலகை ஒளிமயமாக்கியது.
நான் காணாத உலகங்களோ, எனக்கு ஏற்படாத அனுபவங்களோ கிடையாது!