Yogavasishtam @ MAHARAMAYANAM 644
தினமொரு சுலோகம்
நாள் 644
அஞ்ஞானத்தை அழிப்பது அவ்வளவு எளிதல்ல!
யஸ்து சின்மாத்ரக³க³னம்ʼ ஸர்வமித்யேவ போ³த⁴வான்
த்³வேத்தேன போ³த்³த்⁴யதே நேஹ ஸோ(அ)அங்க³திஷ்டதி கேவல: (6.2/147/21)
यस्तु चिन्मात्रगगनं सर्वमित्येव बोधवान्
द्वेत्तेन बोद्ध्यते नेह सोऽअंगतिष्टति केवल: (6.2/147/21)
yastu chinmaatragaganam sarvamityeva bodhavaan
dvettena boddhyate neha so’angatisht’ati kevala: (6.2/147/21)
முனிவர் தொடர்ந்து சொன்னார்:” நான் அந்த நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த பொழுது இந்த உலகம் என் கனவில், கடலிலிருந்து உதித்தெழுந்து போல் உதயமானது.அது பாறையிலிருந்து சிற்பம் போலவும்,மரத்தில் மலர்கள் போலவும்,கடலில் அலைகள் போலவும், மனதில் உதிக்கும் ஞாபகங்களைப் போலவும் திடீரெனத் தோன்றின.அது ஆகாயத்திலிருந்து உதிர்ந்து விழுந்தது போலவும், மண்ணிலிருந்து முளைத்தெழுந்தது போலவும்,இதயத்தில் உதயமாகும் எண்ணங்களைப் போலவும்,தானியக் கதிர்கள் வயலில் விளைந்து தொங்குவது போலவும், கோவிலிலிருந்து வெளியே வருவது போலவும்,திரை விலகிய காட்சி போலவும் காணப்பட்டது.
எங்கிருந்து இந்த உலகம் உதித்தெழுந்தது? யாருக்கும் தெரியாது! அனந்தாவபோதமெனும் மாபெரும் பாறையிலிருந்து செதுக்கின சிற்பம் தான் அது.தூய ஆகாயம் அல்லது வெறுமையெனும் சுவர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை நகரம் அது. அஞ்ஞானம் எனும் மாயாவியின் செப்படி வித்யை! பார்க்கும் பொழுது உண்மை போல் தோன்றினாலும் கால – தேச வேற்றுமைகளுக்கும் கட்டுப்பட்டதில்லை அது! பலவிதமான வித்தியாசங்களுடையது என்று தோன்றினாலும்,அது அத்வைதமும் பன்மைத் தன்மையுடையதும் வெறுமையும் எல்லாமாக ஒரே நேரத்திலிருந்தது.ஆனால் அது இவைகளில் எதுவுமேயில்லை தானும்!.
காற்றில் கட்டின மாளிகை போல், ஜாக்ரத் நிலையில் அது அனுபவப்படுகிறது.ஓருபொழுதும் சிருஷ்டிக்கப் படவில்லையென்றாலும் சிருஷ்டிக்கப் பட்டதாக தோன்றுகிறது.. அது தூய போதமே தான்! அதனுள் காலம், தேசம்,பொருட்கள்,கர்மம், சிருஷ்டி, அழித்தல் என்பன போன்ற எல்லா சக்திகளும் காணப்படுகிறது.அதில் தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் பலவிதமான உயிரினங்களும் உள்ளன. நீர்வீழ்ச்சிகளும், மலைகளும்,காடும்,ஆகாயமும்,நட்சத்திரங்களும் அதிலுள்ளன.நான் இந்த பார்வைக்கோணத்தையும் கண்டேன்.அதே நேரத்தில் நான் முன்னால் வசித்து வந்த வீடும் சொந்தபந்தங்களும் நண்பர்களும் முன்னாலிருந்தது போலவே, இருக்கக் கண்டேன்.இவைகளையெல்லாம் என்பார்வையின் முன் கொண்டு வந்தது என்னில் இழுகிப் சேர்ந்திருந்த வாசனைகள் தான்.
என்னில் கலந்து விட்டிருந்த வாசனைகள் காரணமாக, இந்த காட்சிகள் எதுவும் உண்மையில்லை என்ற உண்மையை மறந்து, நான் என் சொந்த பந்தங்களை கட்டி அணைக்கவும்,.அவர்களின். சுகசௌகரியங்களைக்குறித்து குசலம் விசாரிக்கவும் துவங்கினேன்.ஒரு கண்ணாடி எப்படி தன் முன்னாலுள்ள பொருட்களை உண்மையாக பிரதிபலிக்கின்றதோ அது போல் போதமும் அதில் என்ன என்ன வந்து சேருகின்றனவோ அவைகளையெல்லாம் அவைகளின் பெயர்- மற்றும் உருவங்களுடன் ஒளிரச்செய்கின்றது. ஆனால் எல்லாமே போதம் தான் என்ற சத்தியத்தை உணர்ந்தவன்,இம்மாதிரியான தாற்காலிக உண்மைகளில் ஈர்க்கப்படமாட்டான்.அவன் என்றும் விடுதலை பெற்றவன்! தனியன் ! அவனை எதுவும் பாதிப்பதில்லை!
‘இந்த ஆத்மா ஒன்று தான்’ என்ற அறிவு நஷ்டப்படாதவன் பன்மைகளினாலோ,பிரித்து பார்க்கும் தன்மையினாலோ, எந்த விதமான பேய் விசாரங்களாலோ பாதிக்கப் படுவதில்லை. சத்சங்கத்திலீடுபட்டு,வேத சாஸ்திரங்களை படித்து, ஞானம் உறுதிப்பட்டவனுக்கு, ‘ ஆத்மா ஒன்று தான்’ என்ற அறிவு ஒருபொழுதும் நஷ்டமாவதில்லை.
ஆனால் அந்த காலத்தில் எனது அறிவு இவ்வளவு உறுதியோ, பக்குவமடைந்தோ அடைந்திருக்கவில்லை. பந்தம் என்ற உணர்வு என்னை விட்டுப் போயிருக்கவில்லை. ஆனால் இன்று என் ஞானத்தை அசைக்கவோ, எனது சத்திய சாக்ஷாத்கார முழுமையின் மீது எதன் நிழலும் விழவோ எந்த விதமான சாத்தியமும் கிடையாது.
ஹேய் வேடா, உன் மனது இன்னும் உறுதிப்படவில்லை.உனக்கு இன்னும் மகான்களுடனான சத்சங்கம் கிடைக்கப் பெறவில்லையல்லவா!”
வியாதன் கூறினான்:” ஆமாம் முனிவர்அவர்களே ! தாங்கள் கூறியது உண்மை தான்.தாங்கள் கூறும் வாய்ப்பு. எனக்கு கிடைக்கட்டும்.தங்களின் ‘அஞ்ஞானம் எனும் இருளை அழிக்க வல்ல’ ஒளிமயமான வார்த்தைகளை கேட்ட பிறகும் என்னுள் சந்தேகங்கள் மீதமிருக்கின்றன.’ இதெல்லாம்்உண்மை தானா?’ என்ற கேள்வி என்னுள் படபடத்துக் கொண்டே இருக்கிறது.என்னே கஷ்டம்! இந்த அஞ்ஞானம் தெளிவாகத் தெரிந்தும் அதை அடியோடு அழிக்க இயலவில்லையா! அது இவ்வளவு சிரமமான காரியமாக இருக்கிறது!”