Yogavasishtam @ Maharamayanam 645
தினமொரு சுலோகம்
நாள் 645
சத் எந்த உபாதிகளாலும் பாதிக்கப் படாத போதம் மட்டுமே!
அத: ஸ்வப்ன: க்வசித்ஸத்ய: க்வசிச்சாஸத்ய ஏவ வா
அபு³த்³தா⁴னாம்ʼ ப்ரபு³த்³தா⁴னாம்ʼ நாஸத்³ரூபோ ந ஸன்மய: (6.2/148/14)
अत: स्वप्न: क्वचित्सत्य: क्वचिच्चासत्य एव वा
अबुद्धानां प्रबुद्धानां नासद्रूपो न सन्मय: (6.2/148/14)
ata: svapna: kvachitsatya: kvachichchaasatya eva vaa
abuddhaanaam prabuddhaanaam naasadroopo na sanmaya: (6.2/148/14)
வியாதன் கேட்டான்:” எனக்கு ஒரு சந்தேகம் முனிவரே! எப்படி கனவுப் பொருட்களை ஒரே நேரத்தில் ‘ சத்’ வஸ்துவாகவும், ‘ அசத்’ வஸ்துவாகவும் கருத முடியும்?”
முனிவர் பதில் சொன்னார்:” கனவில் காலம், தேசம், கர்மம், பொருட்கள் தென்படுகிறது.அவைகளை காணக் காரணம் அவைகளைக் குறித்துள்ள எண்ணங்கள் போதத்தில் யதேச்சையாக உளவானது தான்.ஆகவே தான் இவைகள் கனவில் தோன்றும் பொழுது உண்மை போல் தோன்றுகிறது.மந்திரக்கோலினாலோ, மாயக் கற்களினாலோ, மந்திர உச்சரிப்புகளாலோ,மருந்துகளாலோ ,உருவாக்கப்படுகின்ற மாயக் காட்சிகள் சில நேரங்களில் உண்மையும் மற்று சில நேரங்களில் பொய்யாகவும் இருக்கலாம்.ஆனால் கனவில் ஒருவன் உண்மை என்று அனுபவப்பட்டால் அது முற்றிலும் யதேச்சையான ஒன்று தான்.
போதத்தில் என்ன என்ன எண்ணங்கள் வலுவுடன் உருவாகிறதோ, அப்படி உருவாவதற்கு காரணம்- அப்படி அனுபவப்படுவதற்கு காரணம்- போதத்திற்கு அதற்கான வலுவுள்ளதால்த் தான்.
இப்படிப்பட்ட பொருட்கள்உருவாவதை மற்றொரு பொருளால் ஊக்குவிக்க முடியுமென்றால்,போதத்தில் உருவாகும் எண்ணங்களுக்கு உறுதி உண்டு என்று எப்படி கூற முடியும்? உண்மையில் போதத்தில் உண்டாகும் இந்த எண்ணங்களின் தோற்றம் அதன் விருப்பத்தினால் உளவாவது தானே தவிர, வெளிப்பொருட்களின் உண்மைத் தன்மையை சார்ந்திருப்பதில்லை.’இது ‘ ( இந்த எண்ணம்) கனவு என்ற எண்ணம் உருவாகும் பொழுது அந்தக் கனவு சத்தியமாகிறது.ஆனால் அந்த எண்ணத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டால்,அந்த கனவும் சந்தேகத்திற்குட்பட்ட ‘ அசத்’ ஆகிவிடுகிறது.
கனவு காண்பவன் அந்த கனவோடு தொடர்பில்லாத பலவற்றையும் அனுபவிப்பதும், அவைகளை கனவின் பகுதியாக கருதுவதும் உண்டு.அதாவது, மிகவும் யதேச்சையாக போதத்தில் உளவாகின்ற உலகம் எனும் காட்சியில் மாற்றங்கள் உண்டாவதுண்டு! அது இப்பொழுதே நிகழலாம்; இல்லை சிறிது காலம் கடந்து நிகழலாம்.
சிருஷ்டி எனும் எண்ணம் முதலில் போதத்தில் உருவாகிறது.அது சாக்ஷாத்கரிக்கப்படும் பொழுது காணப்படும் உலகமாயிற்று! ஆனால் உருவ மாற்றமும் போதமே தான்!
போதத்தைத் தவிர மற்றெல்லாமே ‘ சத்’ மற்றும் ‘ அசத்’ தான்.அவை முறைப்படுத்தப் பட்டவையோ, முறைப்படுத்தப் படாதவையோ ஆகலாம்.
“ ஆகவே அஞ்ஞானியைப் பொறுத்த வரை, கனவு சில நேரங்களில் ‘சத்’ ஆகவும் மற்ற சில நேரங்களில் ‘ அசத்’ ஆகவும் தோற்றமளிக்கின்றது.ஆனால் ஞானியைப் பொறுத்தவரை அது ‘ சத்’தும் இல்லை, ‘ அசத்’ தும் இல்லை!”
.
உலகமெனும் தோற்றம் போதத்தில் உதித்தெழும் வெறும் நிழல் க்காட்சி தான். நிழல் என்பதாலேயே அது நிஜமில்லை என்று உணர்த்துகிறதல்லவா!
கனவு முடியும் பொழுதும், விழிப்பு நிலை முடியும் பொழுதும் ஒருவன் உறக்கத்தில்த் தான் இருக்கிறான்.ஆகவே விழிப்பு நிலைக்கும் கனவுநிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.போதம் என்றழைக்கப்படும் அசைவற்ற பொருள் தான் விழிப்பும், கனவும் சுஷுப்தியும் – மூன்று அவஸ்தா த்ரயங்களும்! உண்மையில் இவை எதற்கும் ஒரு பொருளும் இல்லை.
இந்த நீண்ட கனவில் முறையோ முறையின்மையோ எதுவும் கிடையாது.கனவில் என்ன என்ன முளைத்தெழுகின்றனவோ, அவையெல்லாம் அப்படியே, காற்றில் அசைவு என்பது போல் காரணம் ஏதுமின்றி நிலை கொள்கின்றன!காரணமில்லாமல் உளவாகும் காரியத்திற்கு என்ன முறைமை வேண்டியிருக்கிறது?.
அதே போல்த் தான் சிருஷ்டிகளும்! அதன் ஆரம்பமும் காரணமில்லாமல் உண்டானது தான்.எவையெல்லாம் எப்படியெப்படி காணப்படுகிறதோ, அதுவே தான் சிருஷ்டியின் முறையும் உலகின் அமைப்பும்.
கனவுகள் சில நேரங்களில்’ சத்’ஆகவும் வேறு சில நேரங்களில் ‘ அசத்’ஆகவும் தோன்றுகிறது. அவைகளுக்கு முறையான அமைப்போ, அடிப்படையோ, மூலமந்திரங்களோ கிடையாது. எல்லாம் வெறும் யதேச்சையானவை தான்.
மந்திரங்களாலும் மருந்துகளாலும் மாயாஜாலங்களாலும் உளவாகின்ற மாயக் காட்சிகள் ஜாக்ரத் அவஸ்தையிலுமுண்டாவதுண்டு. ஆகவே சத் என்பது ஜாக்ரத், சொப்ன, சுஷுப்தி அவஸ்தைகள் என்ற உபாதிகளால் பாதிக்கப் படாத தூய போதம் மட்டுமே!