பதஞ்சலி யோகசூத்திரம் 17

பதஞ்சலி சூத்திரம் 17

சூத்திரம்
17] वितर्कविचारानन्दास्मितारूपानुगमात् संप्रज्ञातः॥१७॥

17] விதர்கவிசாரானந்தா³ஸ்மிதாரூபானுக³மாத் ஸம்ப்ரஜ்ஞாத꞉..17..

விளக்கவுரை

யோகியின் முடிவான இலக்கு பூரண அமைதி நிலையை அடைவது. அது முற்றிலுமாக பிரகிருதி சம்பந்தமான விஷயங்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு புருஷ லக்ஷணங்களை மட்டும் கைக்கொண்டு பரமாத்மாவுடன் இணைவது தான் என்று கட ந்த சூத்திர விளக்கத்தில் கண்டோம்.

அப்படிப்பட்ட சமாதி நிலையை அடைய நிறையை படிகளை கடக்க வேண்டும்.அதன் பின் சென்றடையும் நிலை தான் ஸம்ப்ரஞ்ஞாத சமாதி.
பகுத்தறிவு, பாகுபாடு, பேரின்பம், மாயையின் காரணமாக ஏற்படும் ‘ அஹம் பாவம்’ களைதல் என்ற பல படிகளை கடந்து அடைவது தான் ஸம்ப்ரஞ்ஞாத சமாதி.
சமாதி நிலையை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சம்ப்ரஜ்ஞாதா என்றும் மற்றொன்று அசம்பிரஜ்ஞ்ஞாதா என்றும் அழைக்கப்படுகிறது.
சம்பிரஜ்ஞ்ஞாத நான்கு பிரிவுகளை கொண்டது.

சமாதியில் இயற்கையை ( பிரகிருதியின் எல்லா விஷய வாசனைகளையும்) கட்டுப்படுத்தும் அனைத்து சக்திகளும் வருகின்றன.
முதல் பிரிவு சவிதர்கா என்று அழைக்கப்படுகிறது, மனம் ஒரு பொருளை மற்ற பொருட்களிலிருந்து தனிமைப்படுத்தி மீண்டும் மீண்டும் தியானிக்கும் போது அந்த விஷயத்தின் பல்வேறு தன்மைகளை அலசி ஆராய்கிறோம். பார்த்து, கேட்டு அறிந்த புற விஷயங்களில் சந்தேகமோ குழப்பமோ ஏற்படும் போது, அதை தர்க்க ரீதியாக [debate, discussions] ஆராய்ந்து பிறகு அவ்விஷயங்களில் ஒரு தெளிவு ஏற்பட்ட உடன் கிடைக்கக்கூடிய ஒரு வகை நிம்மதியையே விதர்க்க சமாதி எனப்படுவது..இது புலன்களால் அறிய கூடிய வெளி விஷயங்களில் இருந்து விதர்க்கத்தை ஒட்டி ஏற்படும் ஸம்ப்ரஞ்ஞாத சமாதி
இம்மாதிரியான தியானத்திற்கு இரண்டு விஷயங்கள் மையமாக காணப்படுகின்றன.ஒன்றுபுருஷன்( பரமாத்மா ) சம்பந்தமானது; மற்றொன்று பிரகிருதி சம்பந்தமானது.

. இயற்கையின் கூறுகளை அவற்றின் தொடக்கத்தையும் முடிவையும் நினைத்து மனம் சிந்திக்கும்போது, இது ஒருவகையான சவிதர்காவாகும். அகங்காரம் , புத்தி மற்றும். வெளிப்புற ஸ்தூலமான கூறுகள் பொருள்களாக இருக்கும் அந்த வகையான தியானம் சவிதர்கா எனப்படும். தர்கா என்றால் கேள்வி, சவிதர்கா எந்த ஒரு விஷயத்தையும் கேள்விக்குட்படுத்துவது,ஆனால் கேள்வி ஏதும் எழும்பாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு தியானிப்பது நிர்விதர்கா என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தது விசாரம்- விசாரணையின் மூலம் ஏற்படும் நிம்மதி.

விசாரத்தை ஒட்டி வரக்கூடிய சமாதான நிலை, மனதுக்குள் நம்மை வாட்டி எடுக்கும் விஷயங்களைப் பற்றியது..இது தீவிரமாக ,தனியாக யோசித்து [introspection], அதன் காரணமாக ஏற்பட்ட தெளிவினால் கிடைக்கும் ஒரு வகை மன சமாதானம்.

விதர்க்க- நிவிதற்க தியானங்களுக்கு ஒரு படி மேலே சென்று, தன்மாத்ரங்களைத் தன் பொருளாகக் கொண்டு, அவற்றைக் காலத்திற்கும் இடத்திற்கும் ஒத்தாற் போல் நினைக்கும் போது, அது சவிச்சாரம் எனப்படும். பாகுபாடுடன், அதே தியானம் காலத்தையும் இடத்தையும் தாண்டி, சிந்திக்கும்போது, நுண்ணிய கூறுகள், பாகுபாடு இல்லாமல் நிர்விச்சாரா என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த படி, ஆனந்த நிலையை ஒட்டி ஏற்படும் தெளிவு , நம் புத்தி சம்பந்தத்தை ஒட்டி ஏற்படுவது..முதலில் புரியாதது போல் தோன்றும் அறிவு சார்ந்த விஷயங்கள் புரிய ஆரம்பித்தவுடன் ஏற்படும் ஒரு வகை தெளிவினால் ஏற்படும் நிறைவு.. வெளி விஷயங்கள் எல்லாவற்றையும் மொத்தமாகவோ கைவிடும் போது, தியானத்தின் பொருள் உள் உறுப்பு, சிந்திக்கும் உறுப்பு, மற்றும் சிந்தனை உறுப்பு செயல்பாட்டின் குணங்கள்( மனம், புத்தி மற்றும் அந்தக் கரணம்) என்று எதுவுமே இல்லாததாக கருதப்படும் போது, ஆனந்த சமாதி என்று அழைக்கப்படுகிறது.
கடைசியாக நம்முடைய அஹம் எனும் பாவத்தை இழக்கும் போது ஏற்படுவது;.இதைத்தான் அஸ்மித சமாதி என்று அழைக்கப்படுகிறது..

அந்த சமாதியில் நாம் எதை தியானத்தின் பொருளாக-எல்லா வெளி விஷயங்களின்- பொருட்கள் அல்லது நுண்ணிய பொருட்கள்- பற்றிய அனைத்து யோசனைகளையும்- கைவிடும்போது, ஒரே பொருள் மனம் மட்டுமே மீதம் உள்ளது, சத்வ நிலை அகங்காரம் ( இது நான் எனும் அகம்பாவம் அல்ல)மட்டுமே இருக்கும். இது அஸ்மித சமாதி என்று அழைக்கப்படுகிறது, இதை அடைந்த மனிதன் வேதங்களில் கூறப்பட்டுள்ளது போல் தனது ஸ்தூல உடல் குறித்த நினைவு இல்லாமல் தன்னை சூக்‌ஷ்ம உடலுடன் இணைத்துக் கொண்டு தியானம் செய்கிறான். இந்த நிலையில் இலக்கை அடையாமல் இயற்கையில் இணைந்தவர்கள் -பிரகிருதிலயங்கள்- என்று அழைக்கப்படுகிறார்கள்,, அது தான் பூரண முக்தி!.
.

Leave a comment