Upadesavunthiyar 9
ரமணஜோதி பகுதி -2 – 133
உபதேசவுந்தியார்- 9
சுலோகம் 4
பூஜை- ஜபம்- தியானம் முக்திக்கு மூன்று படிகள்!
திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக்குளத் தொழிலுந்தீபற
வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற
முந்தைய சுலோகத்தில் பகவான் சொன்னார்,’ நிஷ்காமிய கர்மம் மனதை தூய்மைப் படுத்தும்; முக்திக்கு வழி காட்டும்’ என்று.
நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம்:’ மற்ற கர்மங்களினால் பலனில்லையா?’ என்று.இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளுமுன் கர்மங்களைக் குறித்து சிறிது தெரிந்து கொள்வோம்.
கர்மங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் .
1.நித்ய-கர்மா: தினமும் செய்ய வேண்டிய செயல்கள்.ஒரு தந்தை, மகன், சகோதரர் போன்றவர்களாக, நீங்கள் கடமைகளை, தினசரி வேலைகளைச் செய்கிறீர்கள், அன்றாட பிரார்த்தனை, பூஜை போன்றவற்றையும் செய்கிறீர்கள். இப்படி கட்டாயமாக செய்ய வேண்டிய கர்மங்கள் நித்ய கர்மங்கள் எனப்படுகிறது.
2.நைமித்திக-கர்மா: சில சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள். சிக்கலில் இருக்கும் ஒருவருக்கு உதவுதல், இறந்து போன முன்னோர்களின் நினைவு நாளில் செய்ய வேண்டிய சில சடங்குகள் போன்ற செயல்கள் இவை. ஏதோ ஒரு நிமித்தம் – சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியவை. தினசரி செய்ய வேண்டியவையல்ல.
நித்ய மற்றும் நைமித்திக கர்மங்கள் இரண்டையும் ஒன்றாக விஹித-கர்மங்கள் அல்லது செய்ய வேண்டிய செயல்கள் என்று அழைக்கிறார்கள். இவைகளை செய்யாமலிருக்கும் கூடாது.
3. காம்ய-கர்மா: உலக அல்லது மத ரீதியான குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள். ஒருவர் தனது , தனது குடும்பத்தினரின், சொந்த பந்தங்களின் பாதுகாப்பிற்காக, அதிக பணம் சம்பாதிப்பது அல்லது ஒரு மகனைப் பெறுவதற்காக அல்லது சொர்க்கத்திற்குச் செல்வதற்கான சடங்குகளைச் செய்வது போன்ற ஆசார- அனுஷ்டானங்கள் இவை. . தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக செய்கின்றவை இவை.
4. நிஷித்த-கர்மா: செய்யக்கூடாத செயல்கள். : புலால் உண்ணாமை,, மது அருந்தாமை . பிறரை இம்சிக்கமல் இருத்தலே போன்றவை இவை. இவை செய்யக் கூடாத கர்மங்கள்.
5. பிரயாசித்த-கர்மா: செய்து விட்ட தவறுகளுக்கு வருந்தி, பரிகாரமாக செய்யப்படும் செயல்கள். ஒரு செயலால் உற்பத்தி செய்யப்படுவது மற்றொரு செயலால் நிவர்த்திக்கப்படுகிறது., ஒரு தவறான மருந்து உட்கொண்டு விட்டதால் அல்லது ஒரு மருந்து ஒரு எதிர்வினை உருவாக்கும் போது, மருத்துவர் அதை மற்றொரு மருந்தால் சரிசெய்கிறார். அது போன்ற கர்மங்கள் இவை.
இவைகளில் முதலில் கூறிய நித்திய கர்மங்களில் சேர்ந்தது பூஜை, ஜபம், தியானம் போன்றவை. இவையும் முக்திக்கு உதவும் என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
பகவான் ரமணர் சொல்கிறார்:’ உறுதியாக பூஜை, ஜபம் மற்றும் தியானம் ஆகியவை உடல், பேச்சு மற்றும் மனதின் செயல்கள் [முறையே]; [ஒவ்வொன்றும் முந்தையதை] விட, [அடுத்தது] உயர்ந்தது தான்..
பூஜை என்றால் சடங்கு வழிபாடு, ஜபம் என்றால் ஒரு மந்திரத்தை அல்லது கடவுளின் பெயரை மீண்டும் மீண்டும் கூறுவது, தியானம் என்றால் கடவுளை மனதால் நினைத்து தியானிப்பது.
பூஜை தேகத்தால் செய்யப்படுவது. ஜபம் நாவினால் சொல்லப்படுவதும். தியானம் மனதினாலோ செய்யப்படுவது.
உடலால் செய்யப்படும் பூஜை பல்வேறு விதமான சடங்குகளை உள்ளடக்கியது: விளக்கு ஏற்றி வைப்பது, பூக்கள், உணவு போன்றவற்றை வழங்குவது, சங்கீத- வாத்தியார் கோஷங்களுடன், பிரார்த்தனை செய்வது ஏனைய மற்ற சடங்குகளும் இதில் அடங்கியிருக்கின்றன.
உடல், பேச்சு மற்றும் மனம் ஆகியவை இந்த கர்மங்களில் பயன்படுத்தப்படுகிறது.. உடல், பேச்சு மற்றும் மனம் ஆகிய மூன்று புலன்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், மற்ற வழிபாட்டு முறைகளை விட இந்த வழிபாட்டு முறை மிகவும் உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது இந்த செயல்களில் மனம் ஈடுபட வேண்டும் என்றாலும், மனம் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இந்த சடங்குகளில் இயந்திரத்தனமாக ஈடுபடலாம். இந்த வழிபாட்டுத் முறைகளில் முயற்சி எடுத்து மனதை சடங்குகளில் ஈடுபட செய்ய வேண்டும்.பின்னர் முழு மனதுடன் பூஜையில் ஈடுபடவேண்டும்.; பிற உறவுகள் மற்றும் அவற்றின் பிரச்சினைகள் ,சச்சரவுகள் மற்றும் வெளி உலகமும் இதில் ஈடுபடவேண்டியதில்லை.. ஒரு எளிய பக்தர் சடங்கைச் செய்கிறார். உங்கள் அன்றாட வழிபாட்டுடன் நீங்கள் இப்படித்தான் தொடங்க வேண்டும். அது மனதை தூய்மைப் படுத்தி முக்திக்கு வழி காட்டும்.ஆனால், பூஜையில் உபயோகிக்கப்படும் திரவியங்களால் அளவு, அலங்காரங்கள், ஏற்றப்படும் தீபங்களின் எண்ணிக்கை , சங்கீத வித்வான்களின் புகழ், ஏனைய விஷயங்கள் பூஜையின் நோக்கத்தை முறியடித்து மடை மாற்றி விடக்கூடும்.
ஆனால் ஒரு வழிபாடு விரிவாக இருக்க வேண்டியதில்லை; இது எந்த வகையிலும் செய்யப்படலாம்: இது ஒரு பூவின் பிரசாதமாகவோ அல்லது விளக்கை ஏற்றி வைப்பதாகவோ இருக்கலாம். செயலின் பின்னால் உள்ள பக்தி, சடங்கில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் அல்லது குறைகளையும் சரி செய்துவிடும்..
ஒவ்வொரு பூஜையும் ஒரு சங்கற்பத்துடன் துவங்க வேண்டும். அந்த சங்கற்பம் அல்லது தீர்மானம்: “என் மனதில் உள்ள அசுத்தங்களை அகற்றுவதற்கும், இறைவனை மகிழ்விப்பதற்கும் இந்த சடங்கை நான் செய்கிறேன்.”
பூஜைக்கு அடுத்தபடியாக ஜபம் வருகிறது. கடவுளை ஒரு பக்தி பாவத்துடன் துதிப்பது அல்லது அவரது நாமத்தை உச்சரிப்பதை ஜபம் எனப்படும். எல்லாவற்றையும் கட்டியாளுகிறவராக, எல்லா பிரச்சினைகளுக்கும தீர்வு தருபவராக, சர்வவல்லமை படைத்தவராக . எல்லாம் அறிந்தவராக. பல பெயர்களை உள்ளடக்கிய ஒரு மந்திரமாக அவரது நாமங்கள் உச்சரிக்கப்படுவது ஜபம்.. ஆனால் நாவினால் உச்சரிக்கப்படும் பொழுது மனம் ஊர்சுற்ற போய்விட்டதென்றால் அந்த ஜபத்தினால் எந்தப் பயனும் கிடையாது.அகம் அழிந்து கடவுளுடன் ஒன்றி செய்யப்படும் ஜபம் மனதை தூய்மைப் படுத்தும். அது உறுதி! .
இறுதியாக. , தியானம்: இறைவனை நினைப்பது .அவருடைய மகிமைகளை நினைவு கொள்வது.. இங்கே பேச்சும் கைகால்களோ மற்ற புலன்களோ சம்பந்தப்படுவதில்லை; மனம் மட்டுமே செயல்படுகிறது.. தியானம் ஒரு மன ஜபமாக கூட இருக்கலாம்.
இந்த மூன்று, அதாவது பூஜை, ஜபம் மற்றும் தியானம் ஆகியவை அந்த வரிசையிலேயே ஒவ்வொன்றும் முந்தையதை விட உயர்ந்தவை. மூன்றாவது பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், முதல் இரண்டும் செவ்வனே நிறைவேற்றப்பட்டஇருக்க வேண்டும். நேரடியாக தியானம் செய்ய முயற்சித்தால், அது வெற்றி பெறுவது மிகவும் கடினம். மனம் ஒருமுகப்படுவதற்கு முதல் இரண்டு படிகளும் அவசியமே! தியானத்திற்கு ஒரு தயாரிப்பு தேவை. மனம் கவனச்சிதறலில் இருந்து விடுபட்டு, தியானத்திற்கான விருப்பத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும். தியானம் எந்திரத்தனமானதாகவோ அல்லது கட்டாயமாகவோ இருக்கக்கூடாது; . தியானம் ஒரு நிலைத்தன்மையையும், சமானத்தையும் தருகிறது,.
தியானம் முக்தியை நேரடியாக அடைவைப்பதில்லை. .தியானம் முக்தியை அடைவதற்கு பொருத்தமான சூழ்நிலைகளை உருவாக்கலாம்; அவ்வளவு தான்.
ஆனால்.இவை மூன்றும் எந்த சுய லாப நோக்கமும் இல்லாமல் செய்யப்படும் பொழுது நிஷ்காமிய கர்மங்களாகிறது.
.